அரபு மொழியை கொச்சைப்படுத்தும் வகையிலும் அதை கற்பவர்களும் கற்பிப்பவர்களும் தீவிரவாதிகள் என்ற கோணத்திலும் விசாரணை நடத்துவதும், அரபு மொழி புத்தகங்கள் கைப்பற்றப் பட்டன என்று ஒரு மொழியைத் தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்துவது, வன்மையாக கண்டிக்கத்தக்க செயல் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பேராசிரியரான எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜவாஹிருல்லா விடுத்துள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :
“கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஆண்டு காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இது தொடர்பாக பத்து பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
அவ்வப்போது இந்த வழக்கு தொடர்பாக என்று பலரையும் அழைத்து விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், விசாரணை நடத்தி விட்டு பணம், ஆவணங்கள், மொபைல், லேப்டாப் போன்ற பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறோம் அங்கே பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவதாகவும் பாதிக்கப் பட்டவர்கள் கூறுகிறார்கள்.
என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பூந்தமல்லியில் இருப்பதால் அந்த நீதிமன்றம் வந்து வழக்குரைஞரை வைத்து பொருட்களை மீட்பதற்குள் பல நாள்கள் அலைச்சலும்,மன உளைச்சலும் ஏற்படுகிறது. பெரும் பொருட்செலவும் ஏற்படுகிறது. வழக்குக்கு தொடர்பில்லாத பல முஸ்லிம் இளைஞர்களை இப்படி அலைய விடுவது என்ஐஏ வின் தொடர்ச்சியான கொடுஞ்செயலாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை குனியமுத்தூர் பகுதியிலுள்ள ஜமேஷா முபினுடன் இணையம் வழியாக அரபி மொழி படித்த சந்தேகத்துக்குரிய 22 நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அரபு மொழி உலகின் 54 நாடுகளில் பேசப்படும் மொழி, ஐ.நாவின் அலுவல் மொழி என்பதோடு உலக முஸ்லிம்களின் ஆன்மீக மொழியாக விளங்குகிறது. இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அரபு மொழிக்கென்று தனித் துறைகளே உள்ளன.
இந்நிலையில் அரபு மொழியை கொச்சைப்படுத்தும் வகையிலும் அதை கற்பவர்களும் கற்பிப்பவர்களும் தீவிரவாதிகள் என்ற கோணத்திலும் விசாரணை நடத்துவதும், அரபு மொழி புத்தகங்கள் கைப்பற்றப் பட்டன என்று ஒரு மொழியைத் தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்துவதும் கேவலமான, வன்மையாக கண்டிக்கத்தக்க செயல் ஆகும்.
இணையம் வழியே அரபு மொழியை பயின்ற 22 நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இதில் கோவை மாநகராட்சி 82 வார்டு திமுக உறுப்பினரும் வரி விதிப்பு குழு தலைவருமான முபஷீரா அவர்களின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இணையவழி வகுப்பில் அரபு மொழி பயின்றவர்களில் மாமன்ற உறுப்பினர் முபஷீரா அவர்களின் புதிதாக இஸ்லாத்தை தழுவிய கணவரும் ஒருவர். முபஷீரா அவர்களின் தந்தை பத்ருதீன் திமுகவின் முன்னாள் மாமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரும் மாமன்ற உறுப்பினர் முபஷிராவும் அவர்கள் வசிக்கும் பகுதியில் மக்களிடையே நற்பெயரை பெற்றவர்கள் ஆவர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ளதால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் என். ஐ. ஏ. ஈடுபட்டு வருவதாகவே தெரிகிறது.
என்ஐஏ என்பது பாஜக அரசின் கைக்கூலியாக முஸ்லிம்களை அச்சுறுத்தும் புலனாய்வு அமைப்பாக விளங்குகிறது. அமலாக்கத்துறையை வைத்து எதிர் கட்சி தலைவர்கள் எவ்வாறு வேட்டையாடப் படுகிறார்களோ அதே பாணியில் சிறுபான்மை மக்களை வேட்டையாட என்ஐஏ பயன்படுத்தப் படுகிறது.
ஒரு வழக்கில் கைது நடைபெற்று குற்றவாளிகள் என்று பலரையும் கைது செய்து சிறையில் அடைத்த பின்னர் மீண்டும், மீண்டும் சந்தேகத்தின் அடிப்படையில், விசாரணை என்ற பெயரில் இல்லாத காரணங்களை கூறி தொடர்ந்து முஸ்லிம் சமூகத்திடம் அத்து மீறும் போக்கை என்ஐஏ கை விட வேண்டும்.
பாஜக தூண்டுதலின் பேரில் சோதனை என்ற பெயரில் என்.ஐ.ஏ. அமைப்பு தமிழ் நாட்டில் முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது ஏற்புடையது அல்ல.
தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து வழக்குகளையும் தமிழக காவல்துறையே விசாரிக்க வேண்டும். என்ஐஏ விடம் ஒப்படைக்க கூடாது. என்ஐஏ விடம் ஒப்படைத்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என ஜவாஹிருல்லா விடுத்துள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.