ஜப்பானில், விலங்கு பிரியர் ஒருவர் ஓநாய் (wolf man) போல தனது உருவத்தை மாற்றி இருக்கும் விசித்திரமான செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜப்பான் நாட்டில், “Zeppet” என்ற ஆடை அலங்கார நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்தின் ஸ்டூடியோவுக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் தன்னை ஓநாய் போல மாற்றி அலங்காரம் செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார்.
அவர் கூறியதைக் கேட்டு சற்று திகைத்து போன அந்த நிறுவனம், பின்னர், சரி நீங்கள் கேட்டதை செய்து தருகிறோம், ஆனால் செலவு தான் கொஞ்சம் ஜாஸ்தி ஆகும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து, தனது ஆசையை நிறைவேற்ற எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று அந்த நபரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
உடனே, அந்த நபரை ஓநாயாக உருமாற்றும் வேலைகளை செய்யத் தொடங்கியது Zeppet நிறுவனம். இதற்காக, அவரின் உருவத்தை அளவெடுத்து அதற்கு ஏற்ப உடைகளை வடிவமைத்து, பல முறை பல்வேறு டிசைன்களை மாற்றி கடைசியாக அவருக்கு கன கச்சிதமாக பொருந்தும் வகையில், ஓநாய் உடையை அவர் மீது பொருத்தியது அந்நிறுவனம்.
அந்த உடையை போட்ட பின் அந்த நபர் அச்சு அசலாக ஓநாய் (wolf man) போலவே தென்பட்டார். மேலும், தனது பின்னங்கால்களை தூக்கி சிறிது தூரம் ஓநாய் போலவே நடந்து காட்டி புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
இதனையடுத்து, அந்த நபர் ஓநாய் கெட்டப்பில் இருக்கும் போட்டோக்களை அந்த நிறுவனம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.