நாங்குநேரியில் அரங்கேறிய குற்றச் சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது தங்கையை , சக வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் , திரை பிரபலங்கள் என பலரும் அவர்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி அவரது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கனிமொழி எம்பி கூறிருப்பதாவது :
நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
பெற்றோர், ஆசிரியர் என நாம் அனைவரும் பொறுப்பேற்று, சீர்திருத்த வேண்டிய பிரச்சனை இது. சாதியை அழித்தொழிப்பது ஒன்றே நமது தலையாய கடமை. சின்னதுரை மற்றும் அவரது சகோதரி விரைந்து குணமடைந்து நலம் பெற விழைகிறேன் என தனது ட்விட்டர் பதிவில் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார் .