சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ள தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசியில் தலைவர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :
சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சகோதரர் திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்கள் உலக அளவில் மேலும் பல சாதனைகள் படைத்து, நம்மை எல்லாம் பெருமைப்படுத்த வேண்டும் என்று, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :
சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ்குமார் தங்கமும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், ராம் சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.
கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் சாதனை படைத்திருக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் AsianParaGames2022 உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது மாரியப்பன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்! என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளின் உயரம் தாண்டும் ஆட்டத்தில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனிவரும் ஆட்டங்களில் மேலும் சாதிக்கவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.