நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, தமிழகம், மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவிலான தக்காளி பயிரிடப்படுகிறது.
இந்த நிலையில் வட மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தக்காளி வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை பல மாநிலங்களில் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை தொடக்கத்தில், கிலோ, 40 ரூபாய்க்கு விற்ற தாக்காளி 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். கர்நாடகாவில் விவசாயிகள் குடும்பம் ஒன்று 2,000 தக்காளி பெட்டிகளை விற்று ரூ.38 லட்சம் லாபம் பெற்றனர்.
அதே போல் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் தக்காளி பயிரிட்ட விவசாயி துக்காராம் பாகோஜி, கயாகர் குடும்பத்தினர் ரூ.1.5 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளனர்.
துக்காராமுக்கு சொந்தமாக 18 ஏக்கர் விவசாய நிலமும், 12 ஏக்கர் நிலத்தில் மகன் ஈஸ்வர் காயகர் மற்றும் மருமகள் சோனாலி ஆகியோரின் உதவியுடன் தக்காளி பயிரிட்டுள்ளார். நாராயண்கஞ்சில் ஒரு தக்காளி பெட்டியை விற்று ஒரு நாளில் 2,100 ரூபாய் சம்பாதித்துள்ளார். கயாகர் வெள்ளிக்கிழமை மொத்தம் 900 பெட்டிகளை விற்று ஒரே நாளில் ரூ.18 லட்சம் சம்பாதித்துள்ளார்.
கடந்த மாதம், தக்காளி கிரேட்களை தரத்தின் அடிப்படையில், 1,000 ரூபாய் முதல், 2,400 ரூபாய் வரை விற்க முடிந்தது. புனே மாவட்டத்தில் உள்ள ஜுன்னாரில் தக்காளி பயிரிடும் விவசாயிகள் பலர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.
இந்த குழு தக்காளி விற்பனை மூலம் ஒரு மாதத்தில் ரூ.80 கோடி வர்த்தகம் செய்துள்ளதுடன், அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்துள்ளது.
துக்காராமின் மருமகள் சோனாலி நடவு, அறுவடை, பேக்கேஜிங் போன்ற பணிகளை நிர்வகிக்கும் அதே வேளையில், அவரது மகன் ஈஸ்வர் விற்பனை, மேலாண்மை மற்றும் நிதி திட்டமிடல் ஆகியவற்றைக் கையாளுகிறார்.
நாராயண்கஞ்சில் அமைந்துள்ள ஜுன்னு வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் சந்தையில், தரமான 20தக்காளிப் பெட்டியின் அதிகபட்ச விலை ரூ.2,500 ஆக இருந்தது, (கிலோவுக்கு ரூ.125.)
சாதகமான சந்தை நிலவரத்தை அனுபவித்ததால் கடந்த மூன்று மாத கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.