மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு கிராமமே மண்ணில் புதையுண்டதில் 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் இடைவிடாமல் பருவமழை பெய்து வருகிறது. அதே போல் உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசத்திலும் மீண்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மணாலியில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி என்ற மலை கிராமத்தில், புதன் கிழமையன்று நள்ளிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில், அந்த கிராமமே மண்ணின் புதைந்து, வீடுகள் தரைமட்டமாகின.
தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் 16 பேரை சடலமாகவும் 20க்கும் மேற்பட்டோரை காயங்களுடனும் மீட்டனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் சிக்கி உள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.
ஆனால் மீண்டும் மழை பெய்ததால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் வானிலை சற்று இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து, மீண்டும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளில் உள்ளூர் மற்றும் மலையேற்ற வீரர்களும் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறை மற்றும் மருத்துவக் குழுக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, மலையின் உச்சியில் உள்ளதாலும், மழை காரணமாக மலைப்பாதைகள் வழுக்குவதாலும் ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாமல் மீட்புப் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.