தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் – நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் சிதைத்து வரும் நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்க உள்ளதாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் – நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் சிதைத்து வருகிற நீட் தேர்வுக்கு முடிவு கட்டிட திராவிட மாடல் அரசும், தி.மு.கழகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில் திமுக இளைஞரணி, திமுக மாணவரணி, மருத்துவர் அணி இணைந்து கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடத்திய உண்ணாநிலை அறப்போரை தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கவுள்ளோம்.
இந்த முயற்சியை மக்கள் பங்கெடுப்புடன் நடத்திடும் வகையில், இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி மாவட்ட- மாநகர அமைப்பாளர்களுடனான இணைய வழி கலந்தாலோசனை கூட்டம் நாளை (18-10-2023) மாலை நடைபெறவுள்ளது.
அணிகளின் தலைவர்கள் இணை – துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக்கூட்டத்தில், நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அமைச்சர் உதயநிதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.