சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .
தமிழநாட்டில் கடந்த ஜூன் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரவு பகலாக தீவிர சோதனை நடத்தி வந்தனர் .
தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறை உள்பட நீண்ட நாட்களாக சோதனை நடைபெற்று வந்த நிலையில் நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாகவும் அவருக்கு உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர் . இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யபட்டு தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார் .
மறுபக்கம் செந்திபாலாஜி , அமலாக்கத்துறை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . சென்னை உள்பட அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 5 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர் .
செம்மண் குவாரி தொடர்பாக,கடந்த 2012ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய விவகாரம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .