சென்னை உள்ள ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க..ஸ்டாலினுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் .
சென்னை உள்பட அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 5 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை நடத்தி வந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கௌதம் சிகாமணி இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் .
செம்மண் குவாரி தொடர்பாக,கடந்த 2012ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான பல இடங்களில் இரவு வரை சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் பின்னர் விசாரணைக்காக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகிய இரண்டு பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர் .
நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சுமார் 7 மணிநேரம் நடைபெற்ற விசாரணையை அடுத்து அமைச்சர் பொன்முடி அதிகாலை 4 மணிக்கு தன்னுடைய இல்லத்திற்கு திரும்பினார்.
இதையடுத்து நேற்று மாலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணி ஆகியோர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.
இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசிய அமைச்சர் பொன்முடி இன்று காலை நேரில் சந்தித்துள்ளார் .