இருதய பாதிப்பால் பிரபல தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :
தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்கள், இந்தியா முழுவதும் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரது நேர்மைத் தன்மையை சந்தேகிக்கிறது அமலாக்கத்துறை. விசாரணையில் இருந்து காத்துக்கொள்ள யாராவது இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்வார்களா?
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்திருப்பது வருத்தமாக உள்ளது .
நாளை அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது . பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அறுவை சிகிச்சை செய்வதற்கான உடல் தகுதியை நேற்று இரவு அமைச்சர் செந்தில் பாலாஜி பெற்றுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.