பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் (poisoning) கொடுத்து கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள பென்னகோணம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் – தமிழ்ச்செல்வி தம்பதியினருக்கு வினோத்குமார், விஜயகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், இவர்களது மகன் வினோத்குமாருக்கு பிரியா என்ற மனைவியும், விஜயகுமாருக்கு ஜெயா என்ற பெண்ணுடனும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், இவர்களுக்கு நிகிதா, நிகிஷா என்ற 2 இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், வினோத்குமார் மற்றும் விஜயகுமார் சகோதரர்கள் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், வினோத்குமாரின் தாய் தமிழ்ச்செல்வி, மனைவி பிரியா மற்றும் விஜயகுமாரின் மனைவி ஜெயா அவர்களது குழந்தை நிகிதா மற்றும் நிகிஷா ஆகியோர் குடும்பத்துடன் ஒன்றாக பென்னகோணம் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜயகுமாரின் மனைவி ஜெயா கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு பென்னகோணம் கிராமத்திற்கு குழந்தைகளுடன் வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று ஜெயா குழந்தைகளுடன் வீட்டில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், காலையில் எழுந்து வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த வீட்டில் இருந்தவர்களுக்கும் மற்றும் அக்கம் பக்கத்தினரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஜெயா மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு சடலமாக தொங்கி கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
மேலும், அவரது இரண்டு பெண் குழந்தைகளான நிகிதா மற்றும் நிகிஷா வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்து உள்ளனர். இதனையடுத்து, இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து (poisoning) கொலை செய்த பிறகு ஜெயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை என்றாலும் ஜெயாவின் தந்தை செல்வராஜ் தனது மகளின் குடும்பத்தினர் மீது சந்தேகம் இருப்பதாக மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.