செல்வராகவன்-தனுஷ்-யுவன் கூட்டணியில் நீண்ட நாட்களுக்குப் பின், எந்த பெரிய பில்டப்பும் இல்லாமல், கூச்சல் குழப்பம் இல்லாமல் கூலாக இன்று வெளியானது நானே வருவேன். படம் தொடங்கியதும் ஹாலிவுட் ட்ராமா படங்களைப் போல மெல்ல நகர்கிறது.
தயாரிப்பு – வி கிரியேஷன்ஸ்
இயக்கம் – செல்வராகவன்
இசை – யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு – தனுஷ், இந்துஜா, எல்லி அவ்ராம்
வெளியான தேதி – 29 செப்டம்பர் 2022
நேரம் – 2 மணி நேரம்
இரு வேடங்களில் கதாநாயகன் நடிப்பது, அதிலும் அவர்கள் இரட்டையர்களாக இருப்பது தமிழ் திரைத்துறையில் இதற்கு முன் பல படங்களில் பார்த்த ஒன்று. அதை புதிய பாணியில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். அவருக்குத் துணையாக டபுள் சண்டையில் தனுஷ் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதைக்களம்:
படத்தில் தனுஷ் அவர்கள் ஒட்டி பிறந்த இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபு, கதிர் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். பிரபு கதாபாத்திர தனுஷ் ஜோடியாக இந்துஜா, கதிர் கதாபாத்திர தனுஷ் ஜோடியாக எல்லி அவ்ராம். மனநல மருத்துவராக பிரபு, தனுஷின் நண்பனாக யோகி பாபு நடித்திருக்கிறார்கள்.
படத்தில் கதிர் வழக்கமான பிள்ளைகளைப் போல இல்லாமல் சிறு வயதிலிருந்து வித்தியாசமாக இருக்கிறார். இதன் காரணமாகவே அவருடைய பெற்றோர்கள் கதிரை ஒரு கோயிலில் விட்டு விடுகிறார்கள். பிரபுவை மட்டுமே அவர்களுடன் வைத்து வளர்க்கிறார்கள். பல வருடங்கள் கழித்து பிரபுவுக்கு அழகான மனைவி, அன்பான மகள் என்று சந்தோஷமாக வாழ்கிறார்.
இந்நிலையில், திடீரென மகளின் தோற்றத்தில் மாற்றம் தெரிகிறது. அமானுஷ்ய சக்தியின் வேலை எனத் தெரிய, அது யார் எனப் பார்த்தால், சோனி என்கிற பெயரில் ஒரு குழந்தையின் ஆவி தனுஷ் மகள் மீது இருக்கிறது. அது ‛கதிர்’ என்கிற தனது அப்பாவைக் கொலை செய்தால் தான், தனுஷ் மகளிடமிருந்து வெளியேறுவேன் என்கிறது.
தனுஷ் ஆவி சொன்னதைச் செய்தாரா? தன் மகளை மீட்டாரா? குழந்தையில் விடப்பட்ட கதிர் தனுஷ் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதி கதை.
நானே வருவேன்… என்கிற தலைப்பு ஒரு பேய் படத்திற்கான தலைப்பு. படமும் பேய் படம் போலத் தான் தோன்றியது. ஆனால், திரைக்கதைக்குப் பேயைத் துணைக்கு அழைத்திருக்கிறார்கள். மற்றபடி பேய் இருக்கு… ஆனா இல்லை! இடைவேளை விடும் போது, ‛வாவ்… செம்மை…’ என்று தான் தோன்றுகிறது. இடைவேளைக்குப் பின் இரண்டு தனுஷ், இரண்டு குழந்தைகள், இரட்டை குழந்தைகள், இரு ஜானர் என எல்லாமே இரண்டாக வந்து, படத்தின் வேகத்தைக் குறைத்திருப்பதை உணர முடிகிறது.
பொன்னியின் செல்வன் படத்தோடு மோதும் அளவிற்குப் பயங்கரமான படமா என்று கேட்டால், அதைப் பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டுத் தான் சொல்ல முடியும். அதே நேரத்தில் படம் தேறாதா என்று கேட்டால், அந்த ரகம் இல்லை. பார்க்கும் படியான படம் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்திய அளவில் ஒரு படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தோடு போட்டிப் போட்டால், அது தரமான படமாகத் தான் இருக்கும் என சினிமா ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்கிற, சாதூர்யமான யுக்தியோடு படத்தைக் களமிறக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்பு தாணு.
மொத்தத்தில், படம் தொடங்கும் போது அது செல்வராகின் படமாகத் தான் தொடங்கியது! பின்னர், அது மிஸ்கின் படமாக மாறியது. அதன் பின்… ராகவா லாரன்ஸ் படம் போல நகர்ந்து கொண்டிருந்தது.. அப்புறம் என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென அஜய் ஞானத்துப் படமாக மாற துடித்தது.. இறுதியில் ஒரு வழியாக மீண்டும் செல்வராகின் படமாக மாற்றப்பட்டது.
படத்தில் தனுஷ் சம்பளத்தைத் தவிரப் பெரிய செலவு இருப்பதாகத் தெரியவில்லை. எப்படிப் பார்த்தாலும் லாபம் தான் கிடைக்கப் போகிறது. நானே வருவேன்… விரும்பினால் படம் பார்க்க நீங்களும் வருவீர்கள்!