நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2022-23-ம் கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு, வரும் 17 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் தேர்வினை எழுத இந்த ஆண்டு 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 2.57 லட்சம் பேர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
10,64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 31,803 பேர் தமிழ் மொழியில் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நீட் தேர்வு தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறுகிறது. மேலும் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும்.
இந்தியாவில் சுமார் 543 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடக்கவுள்ளது. சமீபத்தில் நீட் தேர்வுக்கான நகர அறிவிப்பு சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
NEET UG 2022 – க்கான நுழைவுச் சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.