நம்மைப் போன்ற பத்திரிகைக்காரங்கள் எல்லோருக்கும் இதே நிலைமை திரும்பும்… அதனால அத மட்டும் மனசுல வச்சிக்கங்க…
என்று நீதிமன்ற வாயிலில் பெலிக்ஸ் கூறியிருப்பது, தமிழகத்தில் ஊடக சுதந்திரம் குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது.
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அவர் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு, கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் குறித்து போலி ஆவணம் வெளியிட்ட வழக்கு என 7க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கஞ்சா வழக்கு தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான போலீசார், கடந்த 10ஆம் தேதி டெல்லியில் வைத்து, பெலிக்ஸை கைது செய்தனர்.
பின்னர் அவரை திருச்சிக்கு அழைத்து வந்தவர்கள், மே 13ஆம் தேதி, திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் க்ரைம் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
அவர் மீது பெண்களை இழிவு படுத்துதல், ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பெண் போலீசார் பாதுகாப்புடன், 3வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்தினர்.
விசாரணைக்குப் பின்னர் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திருச்சி சிறைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
கோர்ட் வளாகத்தில் அவரை அழைத்து வந்தபோது, சுற்றியிருந்த ஊடகத்தினரைப் பார்த்து பெலிக்ஸ் பேசினார்.
தனியாக பத்திரிகையாளர்களை சந்தித்து பிரஸ்மீட் கொடுப்பதாகக் கூறிக் கொண்டே வந்தவர்,
திடீரென, நம்மைப் போன்ற பத்திரிகைக்காரங்கள் எல்லோருக்கும் இதே நிலைமை திரும்பும்…
அதனால அத மட்டும் மனசுல வச்சிக்கங்க… என்று கத்தவும் போலீசார் அவரை பேசவிடாமல் தடுத்து அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து போலீஸ் வாகனத்தில் ஏறியவர், கண்டிப்பாக இது பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட ஒரு போர்….
நிச்சயமா எல்லாருக்கும் இந்த நிலை வரும் என்று எச்சரித்தபடி சென்றார்.
கணவரைப் பார்ப்பதற்காக நீதிமன்றம் வந்திருந்த பெலிக்ஸின் மனைவி, கணவர் சென்ற போலீஸ் வாகனத்தின் பின்னாலேயே சிறிது தூரம் ஓடினார்.
இதனைத் தொடர்ந்து, பெலிக்ஸ் ஜெரால்டின் வழக்கறிஞர் விக்னேஷ்வரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: –
பாரதி உட்பட 3வழக்கறிஞர்கள் தங்களையும் மனுதாரராக இணைக்க வேண்டும் என கூறி வாதங்களை முன்வைத்தனர்.
இரு தரப்பு வாதங்களை கேட்டு அறிந்தபின் நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கர் கொடுத்த நேர்காணல் வீடியோவை முழுவதுமாக பார்வையிட்டார்.
அதன் பின்னர் 27.5.24 வரை பெலிக்ஸுக்கு நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார்.
பெலிக்ஸை தனியாகச் சந்தித்து பேசியபோது, போலீசார் தனக்கு எந்தவித தொந்தரவும் தரவில்லை என்று கூறினார்.
சவுக்கு சங்கரைப் போல பெலிக்ஸுக்கு குண்டாஸ் போடப்படுமா என்பது குறித்து தெரியாது.
சவுக்கு சங்கர் பேசியதால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பெண் காவல்துறையினரும் தங்களது ஆதங்கத்தை நீதிபதியிடம் தெரிவித்தனர் என்று வழக்கறிஞர் விக்னேஷ்வரன் தெரிவித்தார்.