சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது போலீசாரின் பாதுகாப்பு குறைபாடு காரணமா என்னும் கேள்வியை எழுப்பி உள்ளது.
சென்னையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இடங்களில் ஒன்று தான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்.
தமிழகத்திற்கு வெளியேயும், வடமாநிலங்களுக்கும் இங்கிருந்து நாள்தோறும் இயக்கப்படும் ரயில்களில் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.
மேலும் இரவு ரயில் மற்றும் அதிகாலை ரயில் இருப்பவர்கள் ரயில் நிலையத்தில் இரவில் படுத்துத் தூங்குவதும் வழக்கம், இதற்காக இங்கே ஓய்வு அறைகள் கூட உள்ளன.
இதையும் படிங்க: சித்திரைத் திருவிழா நடந்த பகுதியில் ஒருவர் கொலை..!!!
எந்த நேரமும் பயணிகள் இயங்கிக் கொண்டே இருப்பதால், இங்கே 24 மணிநேரமும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் தமிழக காவல் துறையினர், ரயில்வெ பாதுகாப்பு படையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் அமைந்திருக்கும் ஓய்வு அறையைச் சுத்தம் செய்வதற்காகச் சென்ற ரயில்வே தூய்மை பணி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரணம் அங்கு இரும்பு கம்பியில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இருந்ததுதான்.
இதையடுத்து ஊழியர்கள் தெரிவித்த தகவலில் அங்கு வந்த ரயில்வே போலீசார், சுமார் 26 வயது மதிக்கத் தக்க பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றினர்.
பின்னர் சடலத்தை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு போலீசார் உடகூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
அந்தப் பெண் இறந்து கிடந்த இடத்தைச் சுற்றிலும் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளையும் போலீசார் மீட்டு சோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
24 மணி நேரமும் பயணிகள் நடமாட்டம் உள்ள இடத்தில் இளம்பெண் தூக்கில் சடலமாகக் கிடந்தது பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மலேசியாவில் ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : 10 பேர் உயிரிழப்பு
போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ள பகுதியில் எப்படி இந்த சம்பவம் நிகழ்ந்தது என்றும் பயணிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.மேலும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.