தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக பாஜகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பல்வேறு வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்ட காரணத்தால் வாக்களிக்க இயலாமல் போனது.
கோவையில் 1லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாக தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க மாநிலத் தலைவருமான அண்ணாமலை புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கோவை பாராளுமன்ற தொகுதியில் இருந்து தேர்தல் தொடர்பாக புதிய புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சூலூர் சட்டமன்றத் தொகுதியில் பூத் எண் 148, 151, 155, 156, 157, 159, 160 ஆகிய பூத்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தை 1,2,3 என்ற வரிசைப்படி வைக்காமல் 3,2,1 என்ற வரிசையில் வைத்து வாக்காளர்களை குழப்பியதாக பாஜக வினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
பாஜக சூலூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ரவிக்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர்.
வாக்குப் பதிவு இயந்திரங்களை வரிசைப்படி இல்லாமல் மாற்றி வைத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மேலும் அந்த பூத் களில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் எனவும் புகார் மனுவில் கூறியுள்ளனர்.
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வெற்றியை பறிக்க முயற்சிப்பதாகவும், பல்வேறு வாக்காளர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளதால் பலரும் வாக்களிக்க இயலாமல் சென்றாகவும், இந்த தேர்தல் முறைப்படி நடத்தப்பட வில்லை எனவும் பாஜக சூலூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
பறவைக் காய்ச்சல் எதிரொலி… தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!