மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவர் நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியும், மருத்துவப் பணியாளர்களை மிரட்டியும் ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக மன்னார்குடி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு 24மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சிப்ட் முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு மன்னார்குடிப் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
ஏற்கனவே நெற்றியில் காயத்துடன் வந்த கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் அங்கிருந்த செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த போதை ஆசாமி அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து அடித்து உடைத்துள்ளார்.
ஊழியர்களையும், பெண்களையும் அவர் தாக்குவதுபோல சைகை காட்டிமிரட்டி இருக்கிறார்.
மேலும், அங்கிருந்த தடுப்புப் பலகையையும் கையால் மோதி உள்ளார்.
பின்னர் கைகளை மேலே தூக்கியபடி தாவி தாவிக் குதித்துள்ளார்.
போதை ஆசாமியின் இந்த அக்கப்போரால் மருத்துவப் பணியாளர்களும் நோயாளிகளும் பீதியில் ஆழ்ந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறி உள்ளார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் கர்ப்பிணி அடித்து கொலை – தலைமறைவான கணவனுக்கு வலைவீச்சு
கஞ்சா போதை ஆசாமி நிகழ்த்திய அலப்பறைகளை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட அது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கட்டுப்படுத்தப்படாத கஞ்சா போதை காரணமாக இதுபோன்ற அலப்பறைகளும், வன்முறைகளும் அரங்கேறுவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சமூக ஆர்வலர்கள் கஞ்சா நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.