பழைய குற்றால அருவியில் திடீர் என்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது மாயமான 17வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
தற்போது கோடைகாலத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மித முதல் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் மழை பெய்வதால், குற்றால அருவிகளில் தண்ணீர் விழுகிறது.
பள்ளி விடுமுறை காலம் என்பதால் பலரும் அருவிகளுக்கு சென்று ஆனந்தக் குளியல் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றும் பழைய குற்றாலம் அருவியில் உள்ளூர் மக்களும், வெளியூரில் இருந்து சுற்றுலா வந்தவர்களும், ஆனந்தக் குளியல் போட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில், திடீரென்று அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல அடி தூரத்தில் இருந்து அருவி நீர் ஆர்ப்பரித்து விழுந்தது. இதனால் மரக்கட்டைகள், சிறு கற்கள் என வெள்ள நீருடன் அடித்து வரப்பட்டன.
இதையடுத்து அருவியில் குளியல் போட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து அங்கிருந்து ஓடி வெளியேறினர். இதற்குள் அந்தப் பகுதியில் தண்ணீர் வேகமாக ஓடத் தொடங்கியது.
இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கிய நெல்லையைச் சேர்ந்த அஸ்வின் என்னும் 17 வயது சிறுவன் மாயமானான். இதனால் அவரது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்தனர்.
இதுகுறித்த தகவலில் சம்பவ இடத்துக்கு தென்காசி மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும், நேரில் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்களும் வந்து சிறுவனை தேடும் பணியில் தீவிரம் காட்டினர்.
இந்த நிலையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.