தொழில் போட்டி காரணமாக அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் பட்ட பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கேபிள் சேகர்.
இவர் அதிமுக முன்னாள் பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலராகவும் இருந்துள்ளார்.
இவரது மனைவி கயல்விழி சேகர், முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ஆக இருந்தவர்.
இவர்களுக்கு முத்துக்குமார் என்னும் 27 வயது மகனும் உள்ளார்.
சேகர் கேபிள் வேலை மட்டுமின்றி பன்றி வளர்ப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
பன்றி வளர்க்கும் தொழிலில் சேகருக்கும் அவரது சகோதரர் பெரியசாமியின் குடும்பத்துக்கும் நீண்ட நாட்களாகவே பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி; வைரலாகும் பகீர் வீடியோ
இந்த தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட தகராறில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரது கொலைக்குப் பிறகு பகை அதிகமாக இன்று வரை இரு குடும்பத்தினர் இடையேயும் பிரச்சனை நீடித்து வந்துள்ளது.
தந்தை சேகர் இறப்பிற்குப் பிறகு மகன் முத்துக்குமார் கேபிள் மற்றும் பன்றி தொழிலை எடுத்து நடத்தி வந்திருக்கிறார்.
இந்தநிலையில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த முத்துக்குமாரை சிலர் படுகொலை செய்துள்ளனர்.
ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் சிலர் முகம் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
சுமார் 11 மணியளவில் பட்டப் பகலில் மக்கள் நடமாடும் பொது வெளியில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த படுகொலை சம்பவம் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு அரியமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர்.
முத்துக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றிய அவர்கள், பிரேத பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் இடத்தில் இருந்த சிசிடிவி மூலம் வழக்குப் பதிவு செய்து போலீசார் முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதுவரை நடந்த விசாரணையில் தொழில் போட்டி மற்றும் முன் விரோதத்தால் இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: லாரி – ஜீப் மோதல்… 6 பேர் பலி 3 பேர் படுகாயம்!