மன்னார் வளைகுடா கடல் பாதுகாப்புப் பகுதியில், கடலின் மேற்பரப்பு வெப்பம் அதிகமானதால், அப்பகுதியில் பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நீருக்கடியிலும் பவளப்பாறைகளின் பாதிப்பை அறிய, ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் கடல்சார்ந்த சூழல் நிறுவனம், மன்னார் வளைகுடா பகுதியில் கடலின் மேற்பரப்பு வெப்பம் கோடையில் அதிகமாகும் என கணித்தது.
இதனால், அங்கு பவளப்பாறைகள் பரவலாக அழியும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்து, “சிவப்பு எச்சரிக்கை”யும் விடுத்திருந்தது.
மே கடைசி வாரத்துக்கும் ஜூன் முதல் வாரத்துக்கும் இடையில் இந்த பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 3ம் வாரத்திலேயே பாதிப்பின் தொடக்கம் துவங்கிவிட்டது.
இந்த நிலையில், பவளப்பாறைகளின் அழிவை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பக இயக்குநர் ஜெகதீஷ் Sபாகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சென்னையை சேர்ந்த தேசிய நீடித்த கடற்கரை மேலாண்மை மையம் உதவியுடன்,
கள ஆய்வும், பாதிப்பின் தன்மையை ஆய்வு செய்ய இருப்பதாகவும், பவளப்பாறைகளை சுற்றியுள்ள வெப்ப உயர்வை அளக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 11 தீவுகள் ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு,அங்கு ஏப்ரல் 22-27 இடைப்பட்ட காலத்தில் பவளப்பாறைகளின் பாதிப்பை அறிய விரைவு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என SDMRI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி,மண்டபம்,பாக் ஜலசந்தி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,பவளப்பாறைகள் 29°C வெப்பம் வரை பிரச்சனைகளின்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய கடல் மேற்பரப்பு வெப்பம் 33°Cயை தாண்டி உள்ளதாக ஆய்வுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதனால் பவளப்பாறைகளின் அழிவு தொடங்கிவிட்டது என்றும்,போரைட்ஸ் வகை பவளப்பாறைகளில் அழிவு பெருமளவு நடந்து அவை வெள்ளை நிறமாக மாறியுள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுவரை 50% போரைட்ஸ் வகை பவளப்பாறைகள் அழிந்துள்ளதாகவும், அதில் 10% முழுவதும் அழிந்ததாகவும், 90% கொஞ்சமாக அழிந்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஜெகதீஷ்.S.பாகன் மேலும் கூறுகையில்,”அடுத்த 2-3 வாரம் மிக முக்கியமானது என்றும், தீவிர கண்காணிப்பு அது வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
மழை விரைவில் பெய்யாவிடில்,வெப்பம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் பாதிப்பு மேலும் உயரலாம் ” எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது வெப்பம் அதிகரிக்க, புவிவெப்பமடைதல் அதிகமாவதும் முக்கிய காரணமாகி உள்ளது.
புவிவெப்பமடைதலை கட்டுப்படுத்தாமல், தமிழகத்தின் வெப்ப உயர்வையும், தமிழக கடல் மேற்பரப்பு(மன்னார் வளைகுடா பகுதி)வெப்பத்தையும் கட்டுப்படுத்தாமல்,பவளப்பாறைகளை அழிவிலிருந்து காப்பது கடினம் .
இதனை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். பரந்தூர் போன்ற ஈர விளைநிலங்கள் அழிக்கப்படாமல் காப்பது புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான வழி என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்!