சென்னையில் சாதிமறுப்பு திருமணம் செய்ததால் கணவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட நிலையில், தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரின் மகன் 26 வயது பிரவீன். இவர் ஜல்லடியன்பேட்டை சாய் கணேஷ் நகரைச் சேர்ந்த 24 வயது ஷர்மிளா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அந்த வேற்றுமை எல்லாம் காதலுக்கு முன்பாகச் செல்லுபடியாகவில்லை.
காதல்வானில் சிறகடித்துப் பறந்துவந்த இந்த ஜோடிக்கிளிகள் குறித்து குடும்பத்தினருக்கு தெரியவர, ஷர்மி வீட்டில் இருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதனால் எங்கே தங்களைப் பிரித்துவிடுவார்களோ என்று பயந்த காதலர்கள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் சென்று சுயமரியாதை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதன்பின்னர் அம்பேத்கர் நகரில் பிரவீனின் வீட்டில் இவர்கள் வசித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 47 வருடம் கடுங்காவல் தண்டனை..!!
இன்பமாகச் சென்று கொண்டிருந்த காதல் திருமண ஜோடியின் வாழ்க்கையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பெரும் புயல் வீசியது.
அன்று இரவு, பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் மதுபான விடுதியில் நண்பருடன் சேர்ந்து மது அருந்த சென்ற பிரவீனை, 5 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பிரவீன் ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் என்கிற குட்டி அப்பு, வீட்டின் எதிர்ப்பை மீறி தங்கை திருமணம் செய்து கொண்டதால், பழிவாங்குவதற்காக
தனது நண்பர்களான, விஷ்ணுராஜ், ஸ்ரீபன் குமார், ஸ்ரீராம், ஜோதிலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் அபர்ணா தாஸின் திருமண புகைப்படங்கள்
காதல் கணவரின் மறைவுக்குப் பின்னர் சோகத்தில் இருந்து வந்த ஷர்மிளா, ஆணவப் படுகொலை நிகழ காரணமாக இருந்த தன்னுடைய பெற்றோர் மற்றும் இன்னொரு சகோதரர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி, கணவர் இழந்த துக்கத்திலும், தனக்கு நீதி கிடைக்காத வருத்தத்திலும், வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
அதனைப் பார்த்த ஷர்மிளாவின் மாமனார் மற்றும் மாமியார் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த தற்கொலை முயற்சியில் கழுத்துப்பகுதியில் எலும்பு மற்றும் நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் சுயநினைவிழந்த ஷர்மிளாவை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், தற்கொலைக்கு முன்பு ஷர்மிளா எழுதிய கடிதம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
அதில், தன்னுடைய தற்கொலைக்கு காரணம் தனது பெற்றோரான துரை குமார், சரளா மற்றும் மற்றொரு சகோதரரான நரேஷ் ஆகியோர்தான் என்றும்,
தனது கணவர் இல்லாத இந்த உலகத்தில் வாழ விரும்பவில்லை என்றும், தற்கொலைக்குப் பின்னர், பிரவீனுடன் ஒன்றாக சேர்ந்து வாழப் போவதாகவும் அதில் எழுதியுள்ளார்.
காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், காதல் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இந்த நிகழ்வு அந்தப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.