தேர்தல் வெற்றிக்குப் பின் கனிமொழி உள்பட 5 பேர் மத்திய அமைச்சராவார்கள் என்கிற தகவல் திமுக வட்டாரத்தில் தகவல் அலையடிக்கத் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7கட்டமாக நடந்து வருகிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், மே 20ஆம் தேதி ஐந்தாம் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதன்பின்னர் மே 25ஆம் தேதி 6ஆம் கட்ட தேர்தலும், ஜூன் 1ஆம் தேதி இறுதிக்கட்டத்தேர்தலும் நடக்கிறது. 7 கட்ட தேர்தலும் முடிவடைந்த பின்னர் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தலில் வெற்றி பெறப் போவது இந்தியா கூட்டணியா, அல்லது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறதா என்று விவாதங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தால், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவுக்கு 5 மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்கப்பட்டிருப்பதாக திமுக வட்டாரத்தில் அலையடிக்கிறது.
அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கு இன்னின்ன அமைச்சர் பதவி தரவேண்டும் என்றும் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன்படி ஜெகத்ரட்சகனுக்கு வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பதவி, ஆ.ராசாவுக்கு தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தயாநிதிமாறனுக்கு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி ஈரோடு திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷுக்கு கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கூண்டில் சிக்கிய பெண் சிறுத்தை; நிம்மதி அடைந்த பொதுமக்கள்
முக்கியமாக கனிமொழிக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பதவி கேட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். உதயநிதிக்கு போட்டியாக கனிமொழி கருதப்படுவதால், அவருக்கு முதன்முறையாக மத்திய அமைச்சர் பதவி கிடைக்க இருப்பதாகவும் திமுக வட்டாரத்தில் அலையடிக்கிறது.
திமுக போட்டு வைத்துள்ள திட்டம் எல்லாம் ஜூன்4 தேர்தல் முடிவுக்குப் பின்னர்தான் நனவாகுமா? கனவாகுமா என்பது தெரியவரும்!