பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் PRESS, MEDIA, ஊடகம் என்று அடையாளப் பதிவுக்கு தடையா? தெளிவுப்படுத்தவும் முறைப்படுத்தவும் சென்னை பெரு நகர காவல் துறைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!.
சென்னை பெரு நகர போக்குவரத்து காவல் துறை கடந்த 27-04-2024 அன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தி பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களது வாகனங்களில் PRESS/ MEDIA என்ற அடையாள ஸ்டிக்கர் பயன்படுத்துவது நடைமுறையில் உள்ளது.
தமிழக அரசு, அரசின் செய்தித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு வாகன அடையாள ஸ்டிக்கர்களை வழங்கி வருகிறது.
ஊடகங்களில் பணியில் இருக்கும் அனைவருக்கும் அரசின் வாகன அடையாள ஸ்டிக்கர்கள் வழங்குவதில்லை.
நடைமுறையில் அது சாத்தியமும் இல்லை என்றிருக்கக் கூடிய நிலையில் காவல் துறையின் செய்தி வெளியீடு குழப்பங்களையும் அதிருப்தியையுமே உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: விசிகவின் அம்பேத்கர் விருதுபெறும் நடிகர் யார் தெரியுமா?
பத்திரிகை/ ஊடகங்களில் பணியாற்றுவோர் அவரவர் நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்துள்ளனர். பத்திரிகையாளர்கள் / ஊடகவியலாளர்கள் என்பதை உரிய ஆவணங்கள் அடிப்படையில் அடையாளத்தை உறுதி செய்வதில் எவ்வித சிக்கலும், தயக்கமும் இருக்கப் போவதில்லை.
இரவு நேரப்பணி, விபத்து, இயற்கை பேரிடர் என பல சூழல்களில், செய்தி சேகரிக்கும் பணியின் போது வாகனத்தில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் பத்திரிகையாளர்கள் என்று அடையாளம் காண்பதற்கு காவல்துறைக்கும் உதவியாக இருக்கிறது.
முறைகேடாக ,தவறாக, போலியாக பத்திரிகை /ஊடக அடையாளத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
மாறாக சரியான திட்டமிடாமல் தெளிவில்லாமல் இப்படி ஒரு முன்னெடுப்பு எடுக்கப்படும் போது உண்மையான பத்திரிகையாளர்- காவல் துறையினர் நல்லுறவை நிச்சயமாக பாதிக்கச் செய்யும் என்றே கருதுகிறோம்.
பத்திரிகை, ஊடகங்களுக்கு தொடர்பில்லாதவர்கள், சமுக விரோதிகள் ஊடகம்/ PRESS என்று போலியாக பயன்படுத்துவதை சட்டப்படி உறுதியாக தடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில், சென்னை பத்திரிகையாளர் மன்றம் உறுதியாக இருப்பதுடன் அரசுடன், காவல் துறையுடன் முழு ஒத்துழைப்பு தரவும் தயாராக உள்ளோம்.
அதே நேரம் சென்னை பெரு நகர காவல்துறை பத்திரிகையாளர் / ஊடகவியலாளர் வாகன அடையாள ஸ்டிக்கர் தொடர்பாக தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றும்,
வாகன தணிக்கை மிக கண்ணியமாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.