விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் மூவர் உடல் சிதறி பலியான நிலையில், பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
முறையான உரிமம் பெற்று இயங்கிவரும் இந்த கல்குவாரியில், அருகே உள்ள ஆவியூர், கீழஉப்பிலிக்குண்டு, கடம்பன் குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்யும் இந்த குவாரியில், பாறைகள் உடைக்கப்பட்டுக் கிடைக்கும் ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் மணல் போன்றவை கட்டுமானப் பணிக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கல்குவாரியில் பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் அதிக ஒலி எழுப்பும் வெடிகளால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிர்வுகள் உணரப்படுகின்றன.
வீடுகளில் விரிசல் விழுவதாகவும், ஜல்லி துகள்கள் அதிகம் காற்றில் கலந்து, சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதால் உயிருக்கு அச்சம் ஏற்பட்டு வாழும் நிலையும் உள்ளது.
எனவே இந்த கல்குவாரியை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் புகார் எழுப்பி வந்தனர்.
ஆனால் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று காலை கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது
வெளிமாநிலத்தில் இருந்து பாறை உடைக்கும் பணிக்காக கொண்டுவரப்பட்ட வெடிபொருட்கள் குடோனுக்கு மற்றும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெடிபொருட்களை தவறாகக் கையாண்டதில் எதிர்பாராதவிதமாக அவை திடீரென்று வெடித்துச் சிதறியது.
இதனால் அப்பகுதியைச் சுற்றிப் பல மீட்டர் தூரத்திற்குப் புகை மண்டலமாக மாறியது.
மேலும் அப்போது பணியில் ஈடுபட்டிருந்த சிலரும் வெடிவிபத்தில் சிக்கியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் சிதறிக் கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டனர்.
சடலங்களை அடையாளம் கண்டதில், கந்தசாமி (47), துரை (25), குருசாமி (60) ஆகியோர் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வெடிவிபத்தில் காயமடைந்த நிலையில் 8 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே நேரம் குவாரியில் வெடிமருந்துகள் அதிகம் சிதறி இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆய்வு செய்து அவற்றைச் செயலிழக்கச் செய்த பின்னரே மீட்புப்பணியில் ஈடுபட முடியும்.
இதனிடையே மேலும் சிலரது உடல்கள் சிதறிக் கிடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து பயங்கர அதிர்வுகள் எழுந்தததால் சுற்றுவட்டார கிராம மக்களும் அங்கு திரண்டு சென்றனர்.
இந்த நிலையில் குவாரி வெடிவிபத்து குறித்து ஆவியூர் போலீசார் , குவாரி உரிமையாளர் ராஜ்குமார், பங்குதாரர் சேதுராமன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் பங்குதாரரான சேதுராமன் காவல்நிலையத்தில் சரண் அடைந்த நிலையில் ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லியில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… ரஷ்யாவிற்குத் தொடர்பா?