புரட்சிக்கலைஞர் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு வந்த நடிகர் பாலா, அங்கு மாணவர் ஒருவருக்கு கல்விக்காக உதவி புரிந்த வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.
சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் கே.பி.ஒய்.பாலா. சமீப காலமாக தனது காமெடி கலந்த நடிப்பையும் தாண்டி தன்னுடைய உதவும் குணத்தால் தமிழக மக்களின் மனங்களிலும் இடம்பெற்று வருகிறார். தனது வருமானத்தில் இருந்து தனக்காக எதையும் வைத்துக் கொள்ளாமல் ஆதரவற்ற குழந்தைகள் முதல பலருக்கும் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறார்.
ஏற்கனவே இதுபோன்ற உதவிகள் பலவற்றை செய்துவரும் நடிகர் ராகவா லாரன்ஸும் பாலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டு சமூகத்தின் பின் தங்கிய நிலையில் இருப்பவர்களைத் தேடிச் சென்று உதவி வருகிறார்கள்.
இந்த நிலையில் பாலா, மாணவர் ஒருவருக்கு விஜயகாந்தின் நினைவிடத்தில் வைத்து நிதியுதவி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
15வது நார்வே திரைப்பட விழாவில், பாலாவுக்கு புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் வைத்து வழிபடுவதற்காக வருகை தந்திருந்தார் பாலா.
அப்போது அங்கு வந்திருந்த பெண் ஒருவர், பாலாவிடம் தனது மகனின் கல்விக்காக உதவி கேட்டார். கணவரை இழந்த அந்தப் பெண், பிளஸ் 1 வகுப்பு செல்லும் மகனுக்காக உதவி கேட்டார்.
இதையடுத்து அந்த மாணவரின் கல்விக்கட்டணம் குறித்த சான்றிதழை வாங்கிப் பார்த்த பாலா, எதையும் யோசிக்காமல் உடனடியாக தனது சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார்.
இதனால் அந்தப் பெண் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் வடித்தபடி நன்றி சொன்னார்.
அப்போது பாலா, அந்த சிறுவனை நல்லா படி என்று உற்சாகப் படுத்தினார். பாருங்க எப்படி அமைஞ்சிருக்கு… கடவுள்தான் என்றபடி விஜயகாந்தின் புகைப்படத்தை காட்டியவராக அங்கிருந்து புறப்பட்டார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.