வழக்கு விவகாரத்தில் உள்ள நிலத்தை மோசடியாக வாங்கி, மிரட்டல் விடுப்பதாக சேலம் சிசுமருத்துவமனை எம்.டி உள்பட இருவர் மீது பாதிக்கப்பட்ட நபர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி, பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்.
இவர், காரிப்பட்டி காவல்நிலையத்தில், தனது மாமனார் சங்கரன் மற்றும் சேலம் சிசுமருத்துவமனை எம்.டி. முத்துக்குமார் ஆகியோர் நில மோசடி செய்திருப்பதாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் விவரம் வருமாறு;-
ஜெயக்குமாரின் தந்தை ராஜு கடந்த 2021 ஜூன் மாதம் கொரோனாவில் உயிரிழந்துள்ளார்.
முன்னதாக 2017ஆம் ஆண்டு ராஜு, அயோத்திபட்டனம் மேட்டுப்பட்டி தாதனூரில் ரைஸ்மில் ஒன்றை கட்டி உள்ளார்.
இதற்காக தனியார் வங்கியில் 52 லட்சம் ரூபாய் கடன் செலுத்த வேண்டி இருந்துள்ளது.
இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு ஜெயக்குமாருக்கும், சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த முத்து டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சங்கரன் – கவிதா தம்பதியின் மூத்த மகள் ரோஜாவுக்கும் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்துக்குப் பின்னர், ரைஸ்மில் மீதான கடனை ஜெயக்குமாரின் மாமனார் சங்கரன் அடைத்துள்ளார்.
இதற்காக, ராஜு பெயரில் குள்ளம்பட்டி பள்ளக்காட்டில் உள்ள 10 ஏக்கர் நிலத்தை சங்கரன் – கவிதா தம்பதி பெயரில் கிரயம் செய்துள்ளனர்.
அதே நாளில் ரைஸ் மில் மற்றும் அதனுடன் இணைந்த 2ஏக்கர் தோட்டத்துடன் கூடிய வீட்டை சங்கரன், தனது மனைவி கவிதா பெயரில் சேல் அக்ரிமெண்ட் மூலம் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த சூழலில்தான் ராஜு 2021ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், மனைவிக்கும் கணவனுக்கும் இடையே சொத்துவிவகாரம் தொடர்பாக குடும்பத்தில் பிரச்சனை எழுந்துள்ளது.
மேலும் மாமனார் சங்கரனிடம், கடன் தொகையை செலுத்துவதாகக் கூறி தனது சொத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
அவரோ ஒன்றரை கோடி ரூபாய் கேட்க, தனது சொத்தை ஏமாற்றி எழுதிவாங்கியதாக ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இதன் பின்னர் தனது தந்தை வீட்டுக்கு சென்ற ரோஜா அவர்களுடனேயே தங்கியுள்ளார்.
இதனால், ஜெயக்குமாரும், அவரது தயார் கனகாவும், ரைஸ்மில் அருகே உள்ள வீட்டில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் டிசம்பர் 2023ல், மாமனார் சங்கரனும், சேலம் சிசு மருத்துவமனை மேலாண் இயக்குனர் டாக்டர் முத்துக்குமாரும், ஒன்றாக ஜெயக்குமார் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இந்த இடம் தங்களுக்குத்தான் என்று கூறி வீட்டை காலி செய்யும்படியும் முத்துக்குமார் கூறியதாக தெரிகிறது.
இதன்பின்னர், சங்கரன், ஜெயக்குமார் குடும்பத்திடம் இருந்து பெற்ற 10 ஏக்கர் நிலத்தை முத்துக்குமாருக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மார்ச் மாதம் 21ஆம் தேதி, மாலை ஜெயக்குமாரும், அவரது தாயார் கனகாவும், வீட்டில் இருந்தபோது அங்கு வந்த மர்மநபர்கள் 5 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளனர்.
மாமனார் சங்கரன், மருத்துவர் முத்துக்குமார் ஆகியோர் தூண்டுதலின் பேரில்தான் அவர்கள் மிரட்டியதாக, ஜெயக்குமார் புகாரில் கூறியுள்ளார்.
இந்தபுகாரின் பேரில், டாக்டர் முத்துக்குமார் மற்றும் மிரட்டல்நபர்கள் மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட பல பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து மிரட்டலில் ஈடுபட்ட, கார்த்திக், மயில்சாமி, போஸ்கரன், நந்தகுமார் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் மருத்துவர் முத்துக்குமார், முன் ஜாமீன்பெற்றதாக கூறப்படுகிறது.
வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை வாங்கி அதில் உள்ள நபர்களை அடியாட்களை வைத்து மிரட்டி அபகரிக்க முயற்சி செய்வதாக மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.