ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக நால்வரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை (19-4-24)நடைபெற உள்ளது. முன்னதாக தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து அரசியல் கட்சியினர் இறுதிக்கட்டமாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்தபுகார்களின் பேரில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கேணிக்கரை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்காக, ராமநாதபுரம் நகராட்சி 31வது வார்டு திமுக கவுன்சிலர் ஜவா என்கிற ஜஹாங்கீர் பணம் பட்டுவாடா செய்த தகவலில் போலீசார் அவரை மடக்கிடனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.12,500 மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், ஜஹாங்கீரை விசாரித்து வருகின்றனர்.
இதே போல முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிராமம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக திமுகவைச் சேர்ந்த மூவரிடம் அபிராமம் போலீசார் விசாரணை மேற்கொண்டுளனர். அபிராமம் அருகே உள்ள பொட்டக்குளம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த துரைராஜ் என்பவரிடம் இருந்து ரூ.50,000, காடநகரி கிராமத்தில் பணப்பட்டுவாடா செய்த கதிரேசன் என்பவரிடமிருந்து ரூ.50000 , புனவாசல் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாலுச்சாமி என்பவரிடமிருந்து ரூ. 10,500 ஆகியோரிடம் ரூ.1, 10,500 பறிமுதல் செய்த அபிராமம் போலீசார் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ”அரக்கோணத்தில் வெள்ளமாகப் பாயும் பணம்..” – அன்புமணி தெரிவித்த பரபரப்பு தகவல்!
இந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியில் அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாகக் கூறி வீடியோ என்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது. வாக்களிக்க பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமான செயல் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி வரும் நிலையில், எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் கொடுத்து வருகின்றன. எனவே தேர்தல் ஆணையமும் தேர்தல் அதிகாரிகளும் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேர்மையான எண்ணம் கொண்டோரிடம் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை எழுந்துள்ளது.