வேலூரில் மூதாட்டி ஒருவரின் ரேஷன் கார்டு எண்ணைப் பயன்படுத்தி மர்மநபர்கள் கார் வாங்கியதால், மகளிர் உரிமை தொகை வாங்க முடியாமல் தவித்துவருகிறார் அந்த மூதாட்டி.
வேலூர் வேலப்பாடி சேர்வை முத்துசாமி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் 62வயது மூதாட்டி கீதா.
இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது;-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு நான் விண்ணப்பித்திருந்தேன்.
ஆனால் என்னுடைய விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார்கள்.
காரணம் கேட்டு மாவட்ட அதிகாரிகளைச் சந்தித்த போது, உங்கள் பெயரில் கார் வாங்கப்பட்டுள்ளதால் உங்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றனர்.
ஆனால் நாங்கள் எந்த காரும் வாங்கவில்லை. .
யாரோ சிலர் எனது குடும்ப அட்டை எண்ணைப் பயன்படுத்தி கார் வாங்கி இருக்கிறார்கள்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு 2 மாதங்களுக்கு முன்பே வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தேன்.
இதையும் படிங்க: பற்றவைத்த ஸ்டாலின்… பதற்றத்தில் மாவட்ட செயலாளர்கள் .. திமுக-வில் திடீர் மாற்றங்கள்?
அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் என்னை வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்குப் போகச் சொன்னார்கள்.
வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசார் என்னை ஆர்டிஓ அலுவலகத்துக்குச் சென்று விசாரிக்குமாறு கூறினர்.
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உங்கள் குடும்ப அட்டை எண்ணைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட வாகனத்திற்கான பதிவு எண்ணை இதுவரை வழங்கவில்லை என்றனர்.
மேலும் போலீஸ் அதிகாரிகள் பரிந்துரைத்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றனர்.
இது குறித்து புகார் அளித்து 3 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
என்னை மட்டும் தொடர்ந்து அலைய விடுகிறார்கள்.
எனவே இந்த விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுத்து தனக்கான உரிமைத் தொகையைப் பெற்றுத்தருமாறு மூதாட்டி கீதா புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது இந்த புகார் விவரம் வெளியாகி உள்ள நிலையில், ரேசன் கார்டு எண்ணையும் யாரிடமும் கொடுத்து ஏமாந்துவிட வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதே நேரம் 3 மாதங்களாக மூதாட்டியை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீதும், மோசடியாக மூதாட்டியின் ரேசன் கார்டு எண்ணைப் பயன்படுத்தி கார் வாங்கியவரையும் காவல்துறையால் கண்டறிய முடியவில்லையா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை மையங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்திடுக – டிடிவி!