ஊட்டி தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு பணி காரணமாக சுற்றுலாப் பயணிகள் நடக்காத வகையில் புல் தரை மூடப்பட்டுள்ளது.
விடுமுறை என்றாலோ, கோடை காலம் என்றாலோ உடனே ஊட்டிக்கு ஜாலியாக ஒரு சுற்றுலா செல்வது என்பது பெரும்பாலோரின் எண்ணமாக உள்ளது. தற்போது கோடைகாலம் துவங்குவதோடு, பள்ளிகளுக்கும் சில வகுப்புகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஊட்டி, கோடைக்கானல் உள்ளிட்ட கோடை வாசஸ்தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
ஊட்டியில் கடந்த 11ஆம் தேதி முதல் தினமும் 20ஆயிரத்துக்கும் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வந்து செல்வதாக தகவல் கூறப்படுகிறது. அப்படி வருபவர்கள் தனியாகவும், ஜோடிகளாகவும், தங்கள் குடும்பத்துடன் அங்குள்ள புல்தரைகளில் அமர்ந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பது வழக்கம்.
இதையும் படிங்க: பழனி கோவிலில் திடீரென குவிந்த ஜப்பானியர்கள்.. காரணம் என்ன?
தற்போதைய கோடை வெப்பத்தால் நிலவும் வறட்சி காரணமாக, புல்தரைகள் வறண்டு போய் காணப்படுகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளும் தொடர்ந்து புல்தரைகளில் நடந்து செல்வதால், புற்கள் மேலும் பாதிப்படைந்துள்ளன.
இதனைக் கருத்த்தில் கண்டு புல்தரைகளை பொலிவுபடுத்தும் பணியில் பூங்கா நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக 2 வாரங்களுக்கு புல் தரையில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து பூங்கா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
புல் தரையை பராமரித்து, நீர் பாய்ச்சும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில்2 வாரங்களுக்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பூங்கா நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். மேலும் வரும் மே மாதம் நடைபெறும் மலர்க்கண்காட்சி நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.