கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் தேனி போலீசார் சோதனை நடத்தி கஞ்சா சிகரெட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசுக்கு எதிராகவும், திமுகவின் அதிகார மையங்கள் குறித்தும் தொடர்ச்சியாக யூடியூப் சேனல்களில் விமர்சனம் செய்து வந்தவர் யூடியூபர் சவுக்கு சங்கர்.
சமீபத்தில் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த நேர்காணலில், பெண் போலீசார் குறித்தும்,
காவல்துறை அதிகாரிகள் தொடர்பாகவும் அவதூறு கருத்தை பரப்பியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் சுகன்யா, சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார்.
இதன் பேரில் அவதூறு பரப்புதல், பணிபுரிய விடாமல் தடுத்தல், அனுமதியின்றி தவறான கருத்துகளை வெளியிடுதல்,
தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில், சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, போலீசார், தேனியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்து கோவை சிறையில் அடைத்தனர்.
முன்னதாக தேனியில் அவர்களது காரில் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்ததாக, பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் உள்பட மூவர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்தனர்.
இதே போல சேலம் மாநகர போலீசின், சோஷியல் மீடியா பிரிவு எஸ்.ஐ., கீதா,
திருச்சி மாவட்டம், முசிறி டி.எஸ்.பி., யாஸ்மின், ஆகியோர் சவுக்கு சங்கர் மீது அளித்த புகார்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் பெண் காவலர் வனிதா, தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் செய்தி ஆசிரியர்,
தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
இவர்களத் தனித்தனி புகார்களின் பேரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து
அவதூறு பரப்பியதாகவும் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 7க்கும் மேற்பட்ட வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், தேனியில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ,
சவுக்கு சங்கரின் மதுரவாயலில் உள்ள வீடு, தி.நகரில் உள்ள அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
வருவாய்த்துறையினர் முன்னிலையில் பூட்டு அகற்றப்பட்டு 10 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
சோதனையில், வீட்டில் இருந்த 2லட்சம் ரூபாய் ரொக்கம், கஞ்சா சிகரெட்டுகள், கஞ்சா புகைக்க பயன்படும் உபகரணங்கள்,
மடிக்கணினி, ஹார்டு டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சவுக்கு சங்கரின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனிடையே சவுக்கு சங்கரின் நேர்காணலை வெளியிட்ட ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: https://itamiltv.com/news-brutal-attack-by-mercenaries-district-bjp-leader-arrested/
இதனால், ஜாமீன் கோரி பெலிக்ஸ் ஜெரால்டு மனு அளித்திருந்தார். ஆனால் அதனை நீராகரித்த நீதிபதி,
அநாகரீகமாக விவாதம் செய்த பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து பெலிக்ஸ் ஜெரால்டை தேடிவந்த நிலையில்,
திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் தலைமையிலான தனிப்படையினர் அவரை டில்லியில் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டை ரயில் மூலம் திருச்சிக்கு அழைத்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சவுக்கு சங்கர் விவகாரத்தில் தொடர்ந்து நடைபெறும் நடவடிக்கைகள்,
ஒருவித பரபரப்பை ஊடகவியலாளர்கள் மற்றும் யூடியூப் சேனல் நடத்துபவர்களிடையே அதிகரித்துள்ளது.