போலீசாரால் தாக்கப்பட்டதாக சவுக்கு சங்கர் தெரிவித்த நிலையில், நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த 4ஆம் தேதி அதிகாலை தேனியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பெண் காவலர்கள் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் அவதூறு கருத்துகளை பரப்பிய புகாரில் அவரை கைது செய்ததாக கோவை சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தனர்.
கோவை சைபர் க்ரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
முன்னதாக கைதின் போது, சங்கர் மற்றும் அவருடன் இருந்த டிரைவர் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கஞ்சா பதுக்கியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி போலீசார் இந்த வழக்கினை பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கோவை சிறையில் இருந்த சங்கரை கஞ்சா வழக்கில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அனுமதி பெறப்பட்டது.
அதன்பேரில் புதன்கிழமை (மே8) மதுரையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் காவலுடன் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.
கோர்ட்டுக்கு வந்த சங்கரின் வலது கை துணியால் கட்டப்பட்டிருந்தது. அவரது நடையும் தளர்ந்திருந்தது.
நீதிபதி செங்கமலச்செல்வன் “உங்கள் மீதான வழக்கு குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என கேட்டார்.
அதற்கு சவுக்கு சங்கர் “இது பொய் வழக்கு. கோவை சிறையில் போலீசார் என்னை கடுமையாக தாக்கினர். இதனால் எனக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதற்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோவை சிறையில் எனது உயிருக்கு அச்சசுறுத்தல் உள்ளது. இதனால் என்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும்” என்றார்.
அதற்கு நீதிபதி தங்களது கோரிக்கை தொடர்பாக மனு அளிக்கும் பட்சத்தில் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
இதையடுத்து சவுக்கு சங்கரை வருகிற 22 –ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.
இதன்பின்னர் போலீசார் அவரை மீண்டும் கோவை சிறையில் அடைக்க பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாகவும், கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு மருத்துவக் குழுவினர் சிறைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த அறிக்கை நீதிமன்றத்தில் தனித் தனியாக சமர்பிக்கப்பட்டது.
அறிக்கையின் அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பேரில் சவுக்கு சங்கர் இன்று (மே 9) காலை கோவை மத்திய சிறையில் இருந்து போலீஸ் வேன் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு அவருக்கு எக்ஸ்ரே, அல்ட்ரா ஸ்கேன் உள்ளிட்டவை எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. பின்னர், மருத்துவர் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
11 மணியில் இருந்து 12.30 மணி வரை ஒன்றரை மணி நேரம் கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதைத் தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.