கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு தமிழருக்கு கூட வாய்ப்பளிக்காதது தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
9வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கும் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்கின்றன.
4 பிரிவுகளாக இந்த அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா சார்பில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார் என்று பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தன.
தற்போது நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கலக்கிவரும் தமிழக வீரர் நடராஜன் மற்றும்
தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன் ஆகியோரில் யாராவது ஒருவர் தமிழகத்தின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணி பட்டியல் வெளியானது.
ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த்,
சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால்,
அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ் ஆகியோர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முக்கியமாக தமிழக வீரர் ஒருவர் கூட இந்த அணியில் இடம்பெறவில்லை.
அதிலும் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் அபிமானிகள் இடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
டி20 உலகக்கோப்பை போட்டிக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளரும்,
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் அவர்களின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதி வாய்ந்த எந்தவொரு வீரரும் இடம்பெறாதது ஒரு தமிழனாக மேற்கொண்டு வருத்தமளிக்கிறது.
தற்போது வாய்ப்பு இருப்பின் தமிழக வீரர் நடராஜன் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும்.
இதற்காக தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சரத்குமார் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் தமிழகத்துக்காக கதவுகளைத் திறக்குமா?