மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தேனி பாராளுமன்ற தொகுதி, இந்த கோடைக்கு ஏற்ப ஓரளவு குளிர்ச்சியாக இருந்தபோதிலும், நடப்பு தேர்தல் களம் தனலாகவே கொதிக்கிறது.
“திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வேன். ஒருவேளை அவர் தோல்வியடைந்தால், எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்” என தமிழக அமைச்சர் மூர்த்தி தடாலடியாக சவால் விட்டு அனைவரையும் ஆச்சரியத்தோடு கவனம் செலுத்த வைத்திருக்கும் முக்கியமான தொகுதி தேனியாகும்.
இதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம், போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, கம்பம் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. இவற்றில், பெரியகுளம் மற்றும் சோழவந்தான் ஆகிய இரண்டும் தனித் தொகுதிகள் ஆகும்.
இங்கு மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 12 ஆயிரத்தி 499 பேர். இதில், 5 லட்சத்து 44 ஆயிரத்தி 339 பேர் ஆண்கள், 5 லட்சத்து 67 ஆயிரத்தி 967 பேர்.இதில் ஆண் வாக்களர்களின் எண்ணிக்கையை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்
ஆரம்பத்தில், பெரியகுளம் மக்களவை தொகுதியாக இருந்து, பின்னர், 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது தேனி மக்களவை தொகுதியாக உருமாறிய இங்கு இதுவரை 3 தேர்தல்கள் நடைபெறுள்ளன. அதில், 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹாரூன், 2014இல் அதிமுகவைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் கடந்த 2014 தேர்தலில் அதிமுகவின் முன்னால் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அதற்கு முன்பு பெரியகுளம் மக்களவை தொகுதியாக இருந்த போதும் அதிமுகவை சேர்ந்தவர்களே இங்கு அதிகமுறை வெற்றி பெற்றுள்ளனர் என்பதும், அதில், முன்னால் முதல்வர்களான எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இங்குள்ள ஆண்டிப்பட்டை, போடி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, அதிமுக பலமாக இருக்கும் இந்த தேனி மக்களவை தொகுதி இன்னமும் அக்கட்சியின் கோட்டையாகவே உள்ளதா? அல்லது அதில் ஓட்டை விழுந்துள்ளதா என்பதையும் இந்த கருத்துக் கணிப்பின் இறுதியில் நாம் பார்ப்போம்.
அதே போல, மகன் ரவீத்திரநாத் எம்.பி.யாகவும், தந்தை ஓ.பி.எஸ் எம்.எல்.ஏ.வாகவும் இருந்து கோலோச்சிய ஒரே மக்களவை தொகுதியும் தேனிதான். ஆனால், ‘தங்களின் செல்வத்தை வளர்த்துக் கொண்ட அளவிற்கு மக்களிடம் செல்வாக்கை அவர்கள் இருவரும் வளர்த்திருக்கிறார்களா, இல்லையா? என்பதையும் நமது மெகா சர்வேயின் முடிவில் காணலாம்
தமிழகத்தின் மற்ற தொகுதிகளைப் போலவே நான்கு முனைப் போட்டியுள்ள தேனியில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் அக்கட்சியின் தேனி வடக்கு மாவட்ட செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பாக தொழிலதிபர் நாராயணசாமி, பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் டாக்டர். மதன் ஜெயபால் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு தேனி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்ட காரணத்தால் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிடும் தனது தந்தை ஓ.பி.எஸ்.சுக்காக அங்கு களமாடி வருகிறார் ஓ.பி.ரவீந்திரநாத்.
ஆனாலும், கடந்த சுமார் 5 ஆண்டுகளாக எம்.பி.பதவி வகித்த ரவீந்திரநாத்தின் செயல்பாடுகளே தற்போது பாஜக கூட்டணியில் போட்டியிடும் டிடிவி தினகரனின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், கடந்த காலங்களில் ஒரு எம்.பி.யாக தனது தொகுதி மக்களுக்கு என்ன செய்துள்ளார்? கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினாரா அல்லது காற்றில் பறக்க விட்டாரா? போன்ற கேள்விகளையும் நமது கருத்துக் கணிப்பு படிவத்தில் ஒரு முக்கிய அங்கமாக வைத்திருந்தோம்.
அதே போல, போட்டியிடும் வேட்பாளர்கள் சார்ந்துள்ள ஜாதியும் அவர்களின் வாக்கு வங்கியில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் என்பதால், தேனி மக்களவை தொகுதி முழுக்க வாழும் வாக்காளர்களின் ஜாதி குறித்த பரவலையும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.
அப்படி, தொகுதி முழுக்க எடுத்துக் கொண்டால் முக்குலத்தோர் பரவலாகவும், ஆதி திராவிடர்கள், நாயக்கர்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மற்றும் இதர ஜாதியினர் அவற்றிற்கு அடுத்தடுத்த நிலைகளிலும் உள்ளனர். பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இந்த தேனி தொகுதியை விடாப்பிடியாக கேட்டு போட்டியிடுவதற்கு முக்கியமான காரணமே ஜாதிதான் எனக் கூறப்படுகிறது, தவிர, முன்பு பெரியகுளம் மக்களவை தொகுதியாக இருந்த போது கடந்த 1999 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் டிடிவி தினகரன் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதும் மற்றொரு காரணம்.
எனவே, பல கட்டங்களாக நடத்தப்பட்ட நமது ஐ தமிழ் நியூஸின் கருத்துக் கணிப்பின் முதல் கட்டமாக சிட்டிங் எம்.பி.யான ஓ.பி.ரவீந்திரநாத்தின் செயல்பாடு மற்றும் கடந்த தேர்தலின் போது தொகுதி மக்களுக்கு அவர் கொடுத்திருந்த வாக்குறுதிகளை செயல்படுத்தியது அல்லது செயல்படுத்த தவறியது, மாநில அரசின் செயல்பாடுகள், மத்திய அரசின் செயல்பாடுகள் தொகுதியின் பிரச்சனைகள் குறித்து வாக்காளர்கள் அளித்துள்ள தரவுகளை முதலில் பார்ப்போம்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தற்போது திமுக எம்.எல்.ஏ மகாராஜன் வசம் உள்ளது.
இங்கு திமுகவுக்கு 56 சதவீதமும், பா.ஜ.கவுக்கு 28 சதவீதமும், 10 சதவீதத்தினர் நாம் தமிழர் கட்சிக்கும், வெறும் 6 சதவீதத்தினர் மட்டுமே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிட்டிங் எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத்தின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாக 72 சதவீதத்தினரும், 28 சதவீதத்தினர் சுமார் எனவும் தெரிவித்துள்ளனர்
மாநில அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக 68 சதவீதம் பேரும், 32 சதவீதத்தினர் மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதைவிட மத்திய அரசின் செயல்பாடு மோசமாக இருப்பதாக 68 சதவீதத்தினரும்,சுமார் என 32 சதவீதத்தினரும் பதிவு செய்துள்ளனர். தொகுதி பிரச்சனையாக கண்ணகி கோயில் செல்ல சாலை வசதி இல்லாதது என 38 சதவீதத்தினரும், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தாதது குறித்து 26 சதவீதத்தினரும், மாம்பழச்சாறு, திராட்சை ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலை இல்லை என 20 சதவீதம் பேரும், தொழில்வளர்ச்சி இல்லை என 16 சதவீத வாக்காளர்களும் தெரிவித்துள்ளனர்.
முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான பெரியகுளம் தனி தொகுதி திமுக எம்.எல்.ஏ
எஸ்.சரவணகுமாரிடம் உள்ளது. கருத்துக்கணிப்பு படி திமுகவுக்கு 48, பாஜகவுக்கு 30 , மற்றும் அதிமுகவுக்கு 16 , நாம் தமிழருக்கு 6 சதவீத ஆதரவுகள் உள்ளது.
தொகுதி எம்.பி.ரவீந்திரநாத்தின் செயல்பாட்டை பொறுத்தவரை, 14 சதவீத வாக்காளர்கள் “சிறப்பு” எனவும், 62 சதவீதத்தினர், “ மோசம்” என்பதாகவே கருத்துக் கூறி இருக்கின்றனர். 24 சதவீதத்தினர் சுமார் எனவும் தெரிவித்துள்ளனர். மாநில அரசின் செயல்பாட்டை பொறுத்தவரை 50 சதவீதம் பேர் மோசம் என்றும், 40 சதவீதத்தினர் சுமார் என்றும் 10 சதவீதம் பேர் சிறப்பு என்றும் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் செயல்பாட்டைப் பொறுத்தவரை 66 சதவீதம் பேர் மோசம் என்றும் சிறப்பு என 28 சதவீதத்தினரும் 6 சதவீதம் பேர் சுமார் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். மாம்பழச்சாறு மற்றும் ஒயின் தொழிற்சாலை இல்லாதது தொகுதியின் மிகப்பெரிய பிரச்சனையாக 56 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.
போடிநாயக்கனூர்
ஏலக்காய் நகரம் என்னும் பெருமை பெற்ற போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 2011 முதல் 2021 என 3 தேர்தல்களிலும் ஓ.பன்னீர்செல்வமே எம்.எல்.ஏவாக தொடரும் நிலையிலும், சர்வே முடிவுகளின்படி தொகுதியில் திமுகவுக்கு 61 சதவீதம் பேரும், பா.ஜகவுக்கு 20 சதவீதமும், அதிமுகவுக்கு 12 சதவீதத்தினரும், நாம் தமிழர் கட்சிக்கு 7 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர். எம்.பியின் செயல்பாடு சுமாராக இருப்பதாக 89 பேரும், 11 சதவீதத்தினர் மோசமாக இருப்பதாகவும் கணிப்பு தெரிவித்துள்ளனர்.
மாநில அரசின் செயல்பாடு மோசமாக இருப்பதாக 53 சதவீதத்தினரும், 31 சதவீதத்தினர் சுமாராக இருப்பதாகவும், 16 சதவீதத்தினர் சிறப்பாக இருப்பதாகவும் கருத்து பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் செயல்பாடு சுமார் என 44 சதவீதம் பேரும், 34 சதவீதம் பேர் மோசம் என்றும், 22 சதவீதம் பேர் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மாம்பழச்சாறு, ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலை இல்லாததே இங்கும் பிரதான பிரச்சனையாக 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 4 சதவீதத்தினர் மட்டுமே முல்லைப்பெரியாறு பிரச்சனையை சுட்டிக்காட்டிஉள்ளனர்.
சோழவந்தான் தொகுதி
வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தை சேர்ந்த இந்த தொகுதி விவசாயத்துக்கு பெயர் போனது.
1971 முதல் திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றி பெற்று வரும் இந்த தொகுதி தற்போது திமுகவின் வெங்கடேசன் வசம் உள்ளது. இங்கு திமுகவுக்கு 74 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு 24 சதவீதத்தினரும், நாம்தமிழருகு 2 சதவீதத்தினரும் சர்வேயில் ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்.பியின் செயல்பாட்டை பொறுத்தவரை கடும் அதிருப்தியே நிலவுகிறது. 85 சதவீதத்தினர் மோசம் என்றும், தலா 10 சதவீதத்தினர் சிறப்பு மற்றும் சுமார் என்றும் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக 73 சதவீதத்தினரும், 17 சதவீதத்தினர் சுமாராக இருப்பதாகவும், 10 சதவீதம் பேர் மோசமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் செயல்பாடு அப்படியே ரிவர்ஸாகி உள்ளது. மோசம் என்று 75 சதவீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். 20 சதவீதத்தினர் சுமார் எனவும், 5 சதவீதத்தினர் சூப்பர் என்றும் சர்வேயில் பதிவிட்டுள்ளனர். தொழில்வளர்ச்சி இல்லாதது குறித்து 59 சதவீதத்தினரும், 41 சதவீதம் வாக்காளர்கள் முல்லைப் பெரியாறும், தொகுதியின் பிரச்சனையாக தெரிவித்துள்ளனர்.
உசிலம்பட்டி தொகுதி
4 பக்கமும் மேற்கு தொடர்ச்சி மலையால் சூழப்பட்டுள்ள மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உசிலம்பட்டி தொகுதி பார்வர்டு பிளாக் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது கடந்த 2 தேர்தல்களில் அதிமுக வசமாகி உள்ளது. தற்போது அய்யப்பன் இந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளார். ஐ தமிழ் சர்வேப்படி இங்கு 61 சதவீதம் வாக்காளர்கள் திமுகவுக்கும், அதிமுகவுக்க் 29 சதவீதத்தினரும், 10 சதவீதம் பேர் நாம் தமிழர் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத்தின் செயல்பாடு மோசம் என்றே 67 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். சிறப்பாக உள்ளதாக 8 சதவீதம் பேரும், 25 சதவீத வாக்காளர்கள் சுமார் என்றும் கருத்து கூறியுள்ளனர். மாநில அரசின் செயல்பாட்டுக்கு 67 சதவீதம் பேர் சிறப்பு என்று தெரிவித்துள்ளனர். 19 சதவீதம் வாக்காளர்கள் சுமார் என்றும், 14 சதவீதம் பேர் மோசம் என்றும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் செயல்பாடு மோசம் என்று 61 சதவீதம் வாக்காளர்களும், 29 சதவீதம் பேர் சுமார் என்றும், 10 சதவீதத்தினர் சிறப்பு என்றும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தொழில் வளர்ச்சி இல்லாததே இங்கும் பிரதான பிரச்சனையாக உள்ளதாக 72 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐ தமிழ் சர்வே எடுத்த முடிவுகளின் படி ஒட்டுமொத்தமாக தேனி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை 59 சதவீத வாக்காளர்களின் ஆதரவினைப் பெற்று திமுக முதலிடத்தில் இருக்கிறது. அதிமுக 17 சதவீதமும், பா.ஜ.க 16 சதவீதமும் பெற்றும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சி 6 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.