வெளிநாட்டில் வேலை பார்ப்பவருடனான கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கூலிப்படை வைத்து கொல்ல முயன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் , மதுரை வடக்கு தாலுகா சத்திரப்பட்டியைச் சேர்ந்த பாரிச்சாமி (45) என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மர்ம நபர்கள் அவரை கொலை செய்ய முயன்றதாக மனைவி அளித்த புகாரில் போலீசார் அவர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், பாரிச்சாமியின் மனைவி பரிமளா (40) தான் இந்த கொலை முயற்சிக்கு காரணம் என்று பாரிச்சாமியின் தாயார் போலீசில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நடந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: அடக்குமுறைகளுக்கு அஞ்சாத இயக்கம் அஇஅதிமுக – ஜெயக்குமார்
மதுரை மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (35). அபுதாபியில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்துவரும் ரமேஷ் சொந்த ஊரில் கோழிப்பண்ணை வைத்துள்ளார்.
அந்த பண்ணையில் பாரிச்சாமி, தனது மனைவி, 3மகள்கள், 1 மகன் என குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்த ரமேஷ் கோழிப்பண்ணைக்கு அவ்வப்போது வந்து சென்ற நிலையில், அவருக்கும் பரிமளாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் பழக்கம் நெருக்கமாகி, எல்லை மீறி தகாத உறவாகி இருக்கிறது. இதனால் ரமேஷும், பரிமளாவும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மனைவியின் தகாத உறவு குறித்து பாரிச்சாமிக்கு தெரியவர அவர் கண்டித்துள்ளார்.
ஆனால், பரிமளாவோ கணவரின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லையாம்.
இதனால் பாரிச்சாமி, ரமேஷின் கோழிப்பண்ணையில் இருந்து குடும்பத்துடன் வெளியேறி விட்டார்.
இதனிடையே ரமேஷ் மீண்டும் வேலைக்காக அபுதாபிக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் பாரிச்சாமிக்கு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பெரியப்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் காவலாளியாக வேலை கிடைத்துள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பாக குடும்பத்தையும் பெரியப்பட்டி கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்று அங்கே தங்கி இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடரும் கொலைகள்; திமுக அரசில் செயலிழந்த காவல்துறை – டிடிவி தினகரன் விமர்சனம்
பெரியப்பட்டிக்கு வந்தது குறித்து ரமேசுக்கு தகவல் அளித்த பரிமளா, தனது கணவர் தன்னை அடித்து கொடுமைப் படுத்துவதாக கண்ணீர் சிந்தி இருக்கிறார்.
கள்ளக்காதலியின் கண்ணீரால் கலங்கியவர், என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, இறுதியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டம் போட்டுள்ளனர்.
இதற்கான செலவினை தான் கவனித்துக் கொள்வதாக ரமேஷ் கூற, செயல் திட்டத்தில் இறங்கி இருக்கிறார் பரிமளா.
இதற்காக மதுரையில் தனக்குத் தெரிந்த குமார் (36) என்பவரை நாட, அவரும் உதவுவதாகக் கூறி ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
இந்த தகவலை ரமேஷுக்கு சொல்ல, அவர் முதற்கட்டமாக 20ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த பணத்தை பரிமளா, குமாருடன் உள்ள 17 வயது சிறுவனிடம் கொடுத்திருக்கிறார்.
இதன்பின்னர் கொலைத்திட்டத்தை செயல்படுத்தை முடிவு செய்திருக்கிறார்கள்.
அதன்படி கடந்த 12ஆம் தேதி இரவு குமார், 17வயது சிறுவன் உள்பட 7 பேர் கும்பல், பெரியப்பட்டியில் உள்ள கோழிப்பண்ணைக்குள் புகுந்திருக்கிறார்கள்.
அங்கிருந்த பாரிச்சாமியிடம் முயல் வேட்டைக்கு வந்ததாகவும், மழை விட்டபிறகு சென்றுவிடுவதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பி, வீட்டுக்குள் சென்றுள்ளார் பாரிச்சாமி.
அப்போது மின் இணைப்பை துண்டித்த அந்தக் கும்பல் பாரிச்சாமியைத் சரமாரியாகத் தாக்கி இருக்கிறது.
சத்தம் கேட்டு வந்த பாரிச்சாமியின் குழந்தைகள் தந்தையை சூழ்ந்து கொண்டதால் குமார் தலைமையிலான கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதையும் படிங்க: ராகுல்காந்தி பிரதமராக அதிமுக ஆதரவா? – செல்லூர் ராஜு `கலக’ ட்விட்
உடனடியாக பாரிச்சாமியை மீட்ட குடும்பத்தினர் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பாரிச்சாமி அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அப்போது கணவரோடு இருந்த பரிமளா, தனது கள்ளக்காதலை தடுத்ததால்தான் உனக்கு இந்த நிலை என்று கூற, மனைவியின் சதித்திட்டத்தை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார் பாரிச்சாமி.
இந்த நிலையில் மனைவி அருகில் இல்லாதபோது தன்னைப் பார்க்க வந்த தாயாரிடம் நடந்த விஷயங்களைக் கூறியிருக்கிறார்.
தங்களது விசாரணையில் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்ட வேடசந்தூர் போலீசார், பரிமளாவை தேடியபோது அவர் தலைமறைவாகி இருக்கிறார்.
தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் நாமக்கல் மாவட்டம் வேலூர் பகுதியில் பதுங்கி இருந்த பரிமளா, குமார், 17 வயது சிறுவன் ஆகியோரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மேலும் கூலிப்படையினர் 5 பேரை தேடி வருகின்றனர்.
பாரிச்சாமி மீது தாக்குதல் நடத்தியபின்னர் வெளிநாட்டில் உள்ள ரமேஷை தொடர்பு கொண்ட கூலிப்படையினர், அவரை தீர்த்துக்கட்டிவிட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து பேசியபடி மீதிப்பணத்தை கேட்க ரமேஷ், 1லட்சம் ரூபாயை, 17வயது சிறுவனின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்ததாக விசாரணையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் உள்ள ரமேஷிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.