கோவில்பட்டியில் ரேசன் அரிசி கடத்தல் விவாகரத்தில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக, சிறுவன் உள்பட 8 பேரை கைது செய்த போலீசார், மேலும் ஏழு பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பயிற்சி வழக்கறிஞர் மாரிசெல்வம்.
இவரது உறவினரான, இதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை திமுக நிர்வாகியான பாம்பு கார்த்திக் என்ற கார்த்திக் ராஜா, வீடு வீடாகச் சென்று விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி வரச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.
ஒருகட்டத்தில் இதற்கு சிறுவன் மறுக்கவே அவரை பாம்பு கார்த்திக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கறிஞர் மாரிச்செல்வம் , பாம்பு கார்த்திக்கை தட்டிக் கேட்டுள்ளார்.
இந்த சமயத்தில், பாம்பு கார்த்திக் மற்றும் ஆதரவாளர்கள் கடத்திச் சென்ற ரேஷன் அரிசியை விருதுநகர் பகுதியில் வைத்து போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், போலீசாருக்கு மாரிச்செல்வம் தான் தகவல் கொடுத்ததாக கூறி பாம்பு கார்த்திக் ஆத்திரம் அடைந்துள்ளார்.
இதன் எதிரொலியாக, கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் பாம்பு கார்த்திக் தலைமையில் 15 பேர் கொண்ட கும்பல் மாரிசெல்வம் வீட்டிற்கு சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியது.
மேலும், மாரிச்செல்வம் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தையும் அந்த கும்பல் சேதப்படுத்தியது.
அதே போல, ஊத்துப்பட்டி அருகே செண்பகவல்லி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாரி செல்வத்தின் வாகனத்தையும் அந்த கும்பல் தீ வைத்து கொளுத்தியது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் மற்றும் கொப்பம்பட்டி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
புகார்களின் பேரில், 2 காவல் நிலையங்களிலும் பாம்பு கார்த்திக் உள்ளிட்ட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ரேசன் அரிசி கடத்தல் விவகாரத்தில் நிகழ்ந்த இந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விசாரணையை துரிதப்படுத்தினார்.
இதையும் படிங்க: தாம்பரத்தில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்
கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேசன் மற்றும் விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் மாதவா ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த சூழலில் வழக்கு தொடர்பாக குப்பனாபுரத்தைச் சேர்ந்த அருண்குமார், ஓணமாக்குளத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் , கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த சுடலைமுத்து,
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த சண்முகராஜ், கயத்தாறை சேர்ந்த ராஜா என்ற சண்முகராஜா , சகோதரர்களான முத்துகிருஷ்ணன், நரசிம்மன் மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாம்பு கார்த்திக் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத் தடையை ஏற்படுத்தும் மாங்கல்ய தோஷம்