உலகம் முழுவதும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று பேசப்படுகிறது. மூளை புற்றுநோய் தாக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பு மற்றும் இதர சர்வதேச சுகாதார அமைப்புகள், செல்போன் பயன்பாட்டுக்கும், பல்வேறு உடல் உபாதைகளுக்கும் சம்பந்தம் இருப்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று கூறி வந்துள்ளன. இருப்பினும், இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, செல்போன் பயன்பாட்டுக்கும், மூளை புற்றுநோய்க்கும் சம்பந்தம் உள்ளதா என்று அறிய ஆய்வு நடத்தியது. 10 நாடுகளை சேர்ந்த 11 ஆய்வாளர்கள் இதில் பங்கேற்றனர்.
Also Read : பல நாடுகளில் கிளைகளைக் கொண்ட பரம்பொருள் அறக்கட்டளை – பின்னணி குறித்து போலீசார் விசாரணை
ஆஸ்திரேலிய அரசின் கதிரியக்க பாதுகாப்பு குழுவும் பங்கேற்றது. கடந்த 1994-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட 63 ஆய்வுகளின் முடிவுகளும் இந்த ஆய்வில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.
செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு, அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது.
செல்போன் பயன்படுத்துவதற்கும், மூளை புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகரிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களுக்கும், 10 ஆண்டுகளுக்கு மேலாக செல்போன் பயன்படுத்தி வருபவர்களுக்கும் கூட இது பொருந்தும்.
செல்போன் பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ளது. அதற்கேற்றாற்போல், மூளை புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கவில்லை. இதில் இருந்தே இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியலாம்.