நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவில் 4ஜி நெட்வொர்க் சேவையை (4g mobile network) நிறுவ திட்டமிட்டு உள்ள நிலையில், அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 1972 ஆம் ஆண்டு முதன் முதலாக மனிதன் நிலவில் கால் பதித்ததில் இருந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சி முன்னெடுக்கப்படவில்லை.
ஆனால், தற்போது ஆர்ட்டிமிஸ் திட்டத்தின் மூலமாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியை நாசா தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக, நிலவில் 4ஜி நெட்வொர்க் (4g mobile network) சேவையை நிறுவவும் நோக்கியா தீவிர முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
இதற்காக, SpaceX ராக்கெட்டின் உதவியுடன் இந்த நெட்வொர்க்கை நிறுவ நோக்கியா திட்டமிட்டுள்ளது. SpaceX ராக்கெட் நோவா-சி லூனார் லேண்டரில் சேமிக்கப்படும் ஆண்டெனா பொருத்தப்பட்ட அடிப்படை நிலையத்தால் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனுடன் சூரிய சக்தியில் இயங்கும் ரோவர் ஒன்றும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட்டின், லேண்டருக்கும் ரோவருக்கும் இடையே LTE இணைப்பு அமைக்கப்படும் என்றும், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் போது இந்த 4G நெட்வொர்க் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெட்வொர்க் திட்டமானது, நிலவில் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்தவும், பரந்த அளவிலான நிலவின் கண்டுபிடிப்புகளை எளிதாக்கவும் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், எதிர்கால விண்வெளி பயணங்களுக்கான தகவல் தொடர்பு தேவைகளை நிவர்த்தி செய்ய நிலவின் இந்த நெட்வொர்க் உதவும் என்றும் விண்வெளித் தொடர்புத் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்ட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.