உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற நியூஸிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நியூஸிலாந்து – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தியது . பெங்களூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது .
இந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து நியூஸிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய இலங்கை மீண்டும் சொதப்பலான பேட்டிங்கால் அனைத்து விக்கெட்டுகளையும் 46.4 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது .
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்தது . இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவும், அனுபவ வீரரான டெவான் கான்வேவும். அணியின் வெற்றிக்காக சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர் .
இதில் 45 ரன்கள் எடுத்திருந்த கான்வே முதல் விக்கெட்டாக வெளியேற . 42 ரன்கள் எடுத்த ரச்சின் ரவீந்திராவும் விக்கெட்டை பறிகொடுத்தார் . பின்னர் வந்த டேரில் மிட்செல் 43 ரன்கள் அடிக்க நியூஸிலாந்து அணி 23.2 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை ருசித்தது .
நடப்பு உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்து பெறும் 5 வது வெற்றி இதுவாகும். அதேநேரம், இலங்கை பெறும் 7-வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.