ஒடிசாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை (woman cricketer) ராஜஸ்ஸ்ரீ ஸ்வைன் (26). இவர் ஒடிசாவின் பஜ்ரகபட்டி பகுதியில், அம்மாநில அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட நிலையில், அந்த முகாமில் அவருடன் 25 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், இருந்து தேசிய அளவிலான போட்டிகளுக்கு பங்கேற்கும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஒடிசா மாநில மகளிர் கிரிக்கெட் அணியின் இறுதிப் பட்டியல் ஜனவரி 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், ராஜஸ்ஸ்ரீன் பெயர் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ராஜஸ்ரீ விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ராஜஸ்ரீ இறுதிப் பட்டியல் வெளியான 10-ம் தேதி அன்று, தனது பயிற்சியாளரிடம் தந்தையை பார்க்க வீட்டிற்குச் செல்வதாக கூறி விட்டு பயிற்சி முகாமில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு ராஜஸ்ரீ மாயமானார்.
மேலும், அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து, ராஜஸ்ரீயை காணவில்லை என காவல் துறையில், கடந்த 11ஆம் தேதி ஒடிசா மாநில கிரிக்கெட் சங்கம் புகார் அளித்தது.
அந்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்படி, ராஜஸ்ரீயின் செல்போன் சிக்னல் மூலம் குருதிஜாதியா என்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் அவரை கண்டுபிடித்தனர். அங்கு, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ராஜஸ்ரீ நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து, அவரது உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ராஜஸ்ரீயின் மரணத்திற்கான பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் தான் ராஜஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்பட்டாலும், ராஜஸ்ரீயின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ராஜஸ்ரீயின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், தற்கொலை செய்து கொள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு ராஜஸ்ரீ செல்ல வேண்டிய அவசியம் என்ன போன்ற சந்தேகங்கள் இருப்பதாகவும், மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் காவல் துறையினரிடம் கோரியுள்ளனர்.
இந்நிலையில், கிரிக்கெட் வீராங்கனை (woman cricketer) ராஜஸ்ரீயின் மரணம் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.