சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் பலரும் மீச்சு திணறி மயக்கம் அடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலின் போது CPCL நிறுவனத்தின் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு வெளியேறியுள்ளது .
அமோனியம் வாயு கசிவு சற்று அதிகமாக இருந்ததால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர் . மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர் .
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை பதற்றம் அடையவேண்டாம் என கூறி வீடுகளுக்கு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினார் .
இந்நிலையில் எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் தற்போது உறுதி செய்துள்ளது .
ஆலை வாசலில் காற்றில் சுமார் 400 microgram/m3 ஆகஇருக்க வேண்டிய அமோனியா, 2090 microgram/m’ ஆகவும், கடலில் 5 mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா, 49 mg/L இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் எனவும் மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.