குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் எம்ஐடி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை முதல் தாம்பரம் மாநகராட்சி சார்பில் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவ மாணவியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதன்படி முதலில் விடுதியில் தங்கி உள்ள மாணவிகளுக்கு பரிசோதனை செய்ததில் கடந்த சனிக்கிழமை 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 50 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 81 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 61 பேரில் 58 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. .