பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பும் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, பெற்றோர், அல்லது கணவர் உள்ள இடங்களில் 3 ஆண்டுகள் பணி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் காவல்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து, அவர்கள் பணிக்கு திரும்பும்போது அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் .
பெண் காவலர்களின் கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.