தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நேற்று தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிக்கையில் , தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை,கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, நாகை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கன்னியாகுமரி ,திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.