புதுக்கோட்டை இறையூரில் (eraiyur), குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த நிலையில், இதுகுறித்து இழப்பீடு கோரிய வழக்கில் மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை இறையூரில் (eraiyur), ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலந்ததனால், அந்த தண்ணீரைக் குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதனையடுத்து, கறம்பக்குடியைச் சேர்ந்த ஒருவர் இதுதொர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிராமங்களிலும் இது போன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன எனவும், ஆகவே புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் இத்தகைய தீண்டாமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், புதுக்கோட்டை இறையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட மனித உரிமைகள், சமூக நீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அந்தப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்த போது, புதுக்கோட்டை இறையூரில் இரட்டைக்குவளை முறை, கோயிலில் அனுமதிக்காதது போன்ற நிலை இருப்பதும் தெரியவந்தது.
மேலும், இந்த வழக்கு குறித்த அறிக்கை தாக்கல் செய்வதற்காக , வழக்கை ஜனவரி 5-ந் தேதி ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.