100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற இலக்கை எட்ட சமூகநீதி நாயகன் வி.பி.சிங்கின் பிறந்தநாளில் மீண்டும் உறுதியேற்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதிவது :
சமூகநீதி தளத்தில் என் மனம் கவர்ந்தவர்களில் ஒருவரும், எனது நண்பருமான முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 93-ஆம் பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது . இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை எதிர்ப்பு சுனாமிகளை புறம்தள்ளி செயல்படுத்தியவர்; அதனால் ஆட்சிக் கட்டில் பறிக்கப்பட்டதை அலட்சியம் செய்தவர்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில், மக்கள்தொகைக்கு இணையான அளவில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். ஆனால், பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50% உச்சவரம்பு தான் அதற்கு தடையாக இருந்தது.
உயர்வகுப்பு ஏழைகளுக்காக இட ஒதுக்கீட்டு வழக்கில் அந்த உச்சவரம்பு தகர்க்கப்பட்டு விட்ட நிலையில், இடஒதுக்கீடு என்ற தத்துவத்தை ஒதுக்கி வைத்து விட்டு, இடப்பங்கீடு என்ற தத்துவத்தை பின்பற்ற வேண்டும்.
மத்தியிலும், மாநிலத்திலும் 100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற சமூகநீதி இலக்கை அடைவது தான் நமது லட்சியமாக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி பயணிக்கவும், போராடவும் சமூகநீதி நாயகன் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளில் நாம் அனைவரும் மீண்டும் உறுதியேற்போம் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.