பாகிஸ்தானில் அரசியல் கட்சி மாநாட்டில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44-ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கைபர் பகதுன்வா மாகாணம் உள்ளது. அந்த நாட்டின் 4-வது பெரிய மாகாணமாக கைபர் பக்துன்க்வாவில் பஜவுர் என்ற மாவட்டத்தில் JUI-F அரசியல் கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் இந்த அரசியல் கட்சியின் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், பொது மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அப்போது, இந்த நிகழ்ச்சியின் திடீரென பங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் பதறி அடித்து ஓடினர்.
இந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே, பாதுகாப்புப் படையினர் நடத்திய விசாரணையில் தற்கொலைப்படை தாக்குதல் மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாகவும், மேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒருவன் வெடிகுண்டை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இதில் 12 கிலோ வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.
எனினும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.