நெல்லையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் தங்கராஜ். சாதிய ரீதியிலான சமூக அநீதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி அடைந்த பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமானார்.
2018ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் கதிரின் தந்தை கதாபாத்திரத்தில் நாட்டுப்புற கலைஞர் நெல்லை தங்கராஜ், நடித்திருந்தார். சமூக நீதிக்கான குரல் ஓங்கி ஒலித்த அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
அந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் அழுத்தமான பாத்திரத்தால் அனைவரின் மனங்களையும் வென்றவர் நெல்லை தங்கராஜ், அவரைப் போன்ற பெண் வேடமிட்டு தெருக்கூத்தில் ஈடுபடும் கலைஞர்களின் வேதனையின் குரலாகவும் அவர் பிரதிபலித்தார்.
அதில் தனது சிறப்பான நடிப்பின் மூலமாக பலரின் பாராட்டுகளையும் பெற்றார். இந்நிலையில் கலைஞர் தங்கராஜ் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தங்கராஜ் உயிரிழந்துள்ளார்.
இவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.