கடந்த நான்கரை மாதங்களுக்கு பிறகு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ 50 அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
எரிவாயு சிலிண்டர் , பெட்ரோல் டீசல் விலையை கச்சா எண்ணெயின் சந்தை விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சென்னையில் பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது.
சென்னையில் எரிவாயு சிலிண்டரின் விலையை மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. அதன்படி சென்னையில் எரிவாயு சிலிண்டர் விலை செப்டம்பர் மாதம் ரூ 25 அதிகரித்து ரூ 900.50 க்கு விற்பனையாகி வந்த நிலையில் அக்டோபர் மாதம் 17 ரூபாய் அதிகரித்து விலை ரூ 917.50 க்கு விற்பனையானது.
கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி 2022, பிப்ரவரி மாதங்களில் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ 917.50 க்கே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சென்னையில் இன்று வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 50 அதிகரித்துள்ளது. அதன்படி சிலிண்டரின் ரூ 967.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வருவதால் எண்ணெய் பொருட்களின் விலை அதிகரித்தும் சிலிண்டர் விலை அதிகரிக்காமல் இருந்து வந்த நிலையில், நான்கு மாதங்களுக்கு பிறகு இன்று சமையல் எரிவாயு விலை அதிகரிக்கபட்டுள்ளது.
ஏற்கெனவே கொரோனாவால் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்த விலையேற்றம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.