தெலங்கானா மாநிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் தமிழக பெண் விமானி உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பெத்தவூரா மண்டல் ராமண்ணகுடம் தாண்டாவில் பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று மின்கம்பத்தில் மோதி பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் விமானியுடன் மகிமா என்ற பெண் பயிற்சி விமானியும் உயிரிழந்தார்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் தீ எரிந்து கொண்டிருப்பதால் புகை மூட்டமாக காணப்படுகிறது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு காவல்துறையினரும் தீயணைப்பு மீட்பு படையினரும் விரைந்துள்ளனர்.
வருவாய்த்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பயிற்சியின் போது ஹெலிகாப்டர் மேலெழும்ப முடியாமல் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் விபத்துக்கான காரணங்கள் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயிற்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விமானப்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய போது பலத்த சத்தம் கேட்டதாக உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தெலங்கானா மாநிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் தமிழக பெண் விமானி உள்பட 2 பேர் உயிரிழந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.