திருவள்ளூர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை இன்று திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் நடைபெறுகிறது.
திருத்தணி தெக்கலூர் காலனியை சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்பட்டு வரும் சாக்ரீட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பள்ளிக்கு சொந்தமான தனியார் விடுதியில் மாணவி தங்கி படித்து வந்த நிலையில், நேற்று விடுதியில் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தெக்கலூர் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக மாநில நெடுஞ்சாலையில் புறப்பட்டனர்.
இவர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆகியோர்கள் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகில் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.இதனைத் தோடர்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு நேரமானதால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என உத்தரவிட்டார். இதன் காரணமாக இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை முன்னிட்டு 500 ற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்ட்டுள்ளனர்